Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது வெட்கக்கேடான விஷயம் : விஜயகாந்த்

மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது வெட்கக்கேடான விஷயம் : விஜயகாந்த்
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (15:19 IST)
தமிழக மக்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டிய காவல்துறை, கேவலமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது போன்ற வெட்கக்கேடான விஷயம் வேறேதுமில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, இன்று நடைபெறுகின்ற முழுகடையடைப்பு போராட்டத்திற்கு தே.மு.தி.க. முழு ஆதரவு அளித்துள்ளது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே தே.மு.தி.க. நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அ.தி.மு.க. அரசினுடைய காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கின்ற பெயரில், நேற்று இரவோடு இரவாக கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயக ரீதியில், அகிம்சை வழியில் நடைபெறும் போராட்டங்களில் இதுபோன்ற அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டு, கைது செய்வதில்லை. போராட்டத்தில் ஈடுபடும் போது கைதுசெய்யப்படுவதே ஜனநாயக நெறியாகும். ஆனால் அ.தி.மு.க. அரசு போராட்டத்திற்கு முன்பே தே.மு.தி.க.வினர் மீதுள்ள அச்சம் காரணமாக முழு அடைப்பு போராட்டம், மக்கள் போராட்டமாகமாறி வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தின் காரணமாகவே கைது செய்துள்ளதாக கருதுகிறேன்.

அப்படி இல்லையெனும் பட்சத்தில் உடனடியாக அனைவரையும் அ.தி.மு.க. அரசு விடுதலை செய்ய வேண்டும். இது போன்ற மிரட்டல்களுக்கெல்லாம், தே.மு.தி.க. ஒருபோதும் அஞ்சாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டிய காவல்துறை, கேவலமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது போன்ற வெட்கக்கேடான விஷயம் வேறேதுமில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிலிருந்து, காவல்துறை வரை அனைவரும் ஒட்டுமொத்தமாக பொய்யான தகவல்களையே நீதிமன்றங்களுக்கு அளித்து வருகிறார்கள்.டாஸ்மாக் மதுக்கடைகளை அதிகரித்து விட்டு 500 மதுக்கடைகளை மூடிவிட்டோமென்றும், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறதென்றும், அரசு சார்பில் பொய்யான தகவல்கள் நீதிமன்றங்களில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காவல்துறையோ மதுவினால் ஏற்படும் கொலை, கொள்ளை, அடிதடி, விபத்து போன்றவற்றை மறைத்து, நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை அளிப்பதாக தெரியவருகிறது. இப்படி தொடர்ந்து பொய்யே பேசிவருகின்ற இவர்களை பார்க்குபோது “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிதான் நினைவிற்கு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், வழிபாட்டு தலங்கள் அருகிலும், பள்ளிகளின் அருகிலும் இருக்கின்ற டாஸ்மாக் மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியும், பொய்யான காரணங்களைக்கூறி நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை இந்த அ.தி.மு.க. அரசு பொருட்படுத்தாமல், நீதிமன்றத்தையே ஏமாற்றும் போக்கில் செயல்படுகிறது.

மேன்மை தாங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தமிழகத்தில் மதுவிலக்கிற்காக நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்களையும் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். எனவே தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதன் அவசியம் கருதி, தாங்களாகவே முன் வந்து, நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil