Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள் இருந்தும் அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது - விஜயகாந்த்

தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள் இருந்தும் அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது - விஜயகாந்த்
, திங்கள், 29 டிசம்பர் 2014 (19:29 IST)
மக்கள் முதல்வர், தமிழக முதல்வர் என்று இரண்டு முதல்வர்கள் இருந்தும் அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது என்றும், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் தமிழகமே முடங்கிப்போய் விட்டது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால், மக்கள்படும் துன்பத்திற்கு காரணம் அதிமுக அரசின் அலட்சியப்போக்கே ஆகும். இந்த ஆட்சியில் மக்கள் முதல்வர் என்றும், தமிழக முதல்வர் என்றும் இரண்டு முதல்வர்கள் இருந்தும் அரசு முற்றிலும் செயலிழந்து உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.
இதனால் தமிழகமே முடங்கிப் போயுள்ளது. அவசர காரியங்களுக்காக வெளியே சென்ற மக்களும், வெளியூர் சென்றவர்களும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
 
அரசு நடத்தும் வேலை வாய்ப்பு தேர்வுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பலரும் சிக்கிக்கொண்டனர். இதையெல்லாம் ஆட்சியாளர்கள் கண்டு கொண்டார்களா? தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசாமல் இத்துறையின் அமைச்சர் போக்குவரத்து பணிமனையில் ஆய்வு செய்தால் இப்பிரச்சனை தீர்ந்துவிடுமா?
 
ஆளும்கட்சியின் தொழிற்சங்கத்தை சார்ந்த நிர்வாகி ஆணவத்தோடும், அதிகாரத்தோடும், அதிகாரிகளின் துணையுடன் மற்ற தொழிற்சங்கத்தின் தொழிலாளர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்ததன் விளைவே அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்பாகவே போராட்டம் தொடங்கிவிட்டது.
 
முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தொழிற்சங்கத்தினரின் பிரச்னைகளை பேசி தீர்க்கவேண்டுமே ஒழிய, போராட்டத்தை உடைக்கும் முயற்சியிலோ, தொழிற்சங்கத்தினரை பிரித்தாளும் சூழ்ச்சியால் பிளவுபடுத்த எண்ணக்கூடாது. தொழிலாளர்கள் தங்களை ஆட்சியாளர்கள் அழைத்துப்பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். அவர்களை அழைத்து பேசுவதற்குகூட இந்த அரசுக்கு மனம் இல்லையா? அ.தி.மு.க ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொருமுறையும் போக்குவரத்து தொழிலாளர்களை கிள்ளுக்கீரையாக நினைத்துக்கொண்டு செயல்படுகிறது.
 
2001ல் ஆட்சிக்கு வந்தபோதும் இதேபோன்று 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க தொழிற்சங்கம் போராட்டம் நடத்தியது. அதே போல்தான் தற்போதும், அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்துகிறது.
 
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் நிலைப்பாட்டில் ஏன் இந்த மாற்றம்? அன்றைக்கு நியாயமாக தெரிந்தவை இன்று நியாயமாக தெரியவில்லையா? அனுபவம் இல்லாத தற்காலிக பணியாளர்களை கொண்டு ஒருசில பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதையும் மக்கள் நம்பி அப்பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அதன் விளைவுதான் மதுரையில் கல்லூரி மாணவர் பலியாகியுள்ளார்.
 
முதியோர், மாணவ, மாணவியர், உடல்நலம் குன்றியோர், பணிக்கு செல்வோர் என அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் வழக்கை காரணம் காட்டாமல், அரசியலாகப் பார்க்காமல், பொதுமக்களுடைய அடிப்படை பிரச்னையாக கருதி, இத்துறையின் அமைச்சரும், முதலமைச்சரும் நேரடியாக, இப்பிரச்னையில் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டுகிறேன்.
 
சென்னையில் மட்டும் ஒருசில பேருந்துகளை இயக்கிவிட்டு, மக்கள் மத்தியில் பேருந்துகள் வழக்கம்போல் தமிழ்நாடு முழுவதும் இயங்குவதாக வெற்று அறிக்கைகளை வெளியிடாமல் மக்கள் காதில் பூ சுற்றுவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாக சிந்தித்து இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்டு தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தை சகஜநிலைக்கு திரும்பக் கொண்டுவர நடவடிக்கை வேண்டுகிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil