Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"தருமம் மறுபடியும் வெல்லும்" - விஜயதசமியை முன்னிட்டு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Webdunia
புதன், 1 அக்டோபர் 2014 (13:32 IST)
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும், அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று, தர்மம் நிலைநாட்டப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆயுத பூஜை & விஜயதசமி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:
 
வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாயும் செல்வத்தைத் தரும் திருமகளாயும், துணிவைத் தரும் மலைமகளாயும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் விழா, நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை ஒன்பது நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள். 
 
ஒன்பது நாட்கள் அன்னை சக்தியை வழிபடுவதால் ‘நவராத்திரி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றது. நவராத்திரி நாட்களில் தேவியர் மூவரையும் உளமார வணங்கினால் வீரம், செல்வம், கல்வி என அனைத்து நன்மைகளையும் பெறலாம். 
 
நவராத்திரி திருவிழா என்பது ஆன்மிக விழா மட்டுமல்ல, கைவினைஞர்களின் கைவண்ணத்திற்கு பெருமை சேர்க்கும் விழா, உழைப்பின் உன்னதத்திற்கு மதிப்பளிக்கும் விழா. 
 
விஜயதசமி தினத்தன்று கல்வி, கலை, தொழில்கள் ஆகியவற்றைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கும் திருநாள் விஜயதசமி திருநாள். 
 
அன்னை சாமுண்டீஸ்வரி மகிஷாசுரனை வதம் செய்த நாளான விஜயதசமி தினத்தன்று தீயவை அகன்று நல்லவை நடக்கட்டும்! 
 
“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்” என்பது இயற்கை நியதி. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று, தர்மம் நிலைநாட்டப்படும். 
 
தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை போற்றி வணங்கி, அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments