Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ - ராமதாஸ் வலியுறுத்தல்

’விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ - ராமதாஸ் வலியுறுத்தல்
, வியாழன், 5 நவம்பர் 2015 (20:00 IST)
அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்திய முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர்.
 
அமைச்சரின் தூண்டுதலால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
 
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வரும் விஜயபாஸ்கருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உள்ளூரில் மக்கள் நலப் பணிகளை செய்வதில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.
 
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் கெங்கையம்மாள், கருப்பட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, கணேசன் ஆகியோர் தங்கள் பகுதியில் மருத்துவமனை அமைத்துத் தரும்படி கோரிக்கை வைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது இல்லத்தில் அனுமதி வாங்கி சந்தித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
 
அவர்களை வீட்டுக்குள் அழைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘எனக்கு எதிராக கொடி பிடிக்கிறீர்களா? வலையர் (முத்தரையர்) சாதியை சேர்ந்த உங்களால் என்னை எதுவும் செய்யமுடியாது’’ என்பதில் தொடங்கி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
 
பெண் என்றும் பார்க்காமல் இப்படி திட்டுவது சரியா எனக் கேட்ட போது, ஊராட்சி ஒன்றியத் தலைவர் கெங்கையம்மாள் மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் அச்சமடைந்த அவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக காவல் நிலையத்திலும், காவல்துறை உயரதிகாரிகளிடமும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். மாறாக அமைச்சர் தூண்டுதலில் அவர்கள் மீண்டும் மிரட்டப்பட்டுள்ளனர்.
 
முத்தரையர் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கரைக் கண்டித்து புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் கூடுதலான முத்தரையர்கள் புதுக்கோட்டை நகரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
 
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, மீமிசல், திருமயம், இச்சடி உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 20 மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் அவர்களுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதிமுகவில் தமக்கு பிடிக்காதவர்களை அவர்களின் சமூகத்தின் பெயரைக் கூறி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அமைச்சர் திட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் சுயநலத்திற்காக அவர்களிடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை அதிமுக ஆதரிக்கிறதா என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா விளக்க வேண்டும்.
 
அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil