Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ
, சனி, 25 ஏப்ரல் 2015 (16:08 IST)
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
 
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.150 கோடியை, தமிழக அரசு உடனடியாக மே மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையேல் வரும் கல்வி ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மாணவரைக்கூட சேர்க்க மாட்டோம்” என்று தனியார் பள்ளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாமலும், உரிய கண்காணிப்பு இல்லாமலும் இச்சட்டத்தின் நோக்கத்தையே அதிமுக அரசு சீரழித்துவிட்டது. 2010 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 6 முதல் 14 வயதுக் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமை என்பதால், அவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும்” என்று வரையறுக்கிறது.
 
போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டும்; குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் நடைமுறை எளிமை ஆக்கப்பட வேண்டும்; வயது சான்றிதழ், மாறுதல் சான்றிதழ் ஆகியவை பள்ளிச் சேர்க்கையின் போது வலியுறுத்தப்படக்கூடாது; மூன்று முதல் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு இலவச முன் பருவக் கல்வி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்; பள்ளி நிர்வாகம் என்பது உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவற்றோடு, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு அரசே செலுத்த வேண்டும், என்று இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது.
 
அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு, மற்ற துறைகளைப் போன்று கல்வித்துறையும் சீர்குலைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகக் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்திட பள்ளிக் கல்வித்துறை எடுத்த நடவடிக்கை என்ன? கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை ஏற்க மறுத்து, அதன் பரிந்துரைகளை செயல்படுத்த முன்வராத தனியார் பள்ளிகள் மீது அதிமுக அரசு இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொண்டது? என்று கல்வி அமைச்சர் விளக்கம் அளிப்பாரா?
 
கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழைக் குழந்தைகளுக்கான 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீட்டின் கீழ் ஒரு இலட்சத்து 43 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2013.2014 கல்வி ஆண்டு வரை மொத்தம் 16,194 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 6 வயது முதல் 14 வயது வரை இந்தியா முழுவதும் குழந்தைகள் சேர்க்கை விகிதம் 29 விழுக்காடு. ஆனால், தமிழ்நாட்டில் வெறும் 11.3 விழுக்காடு என்பது வருத்ததிற்குரியது.
 
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அதிமுக அரசு வரும் கல்வி ஆண்டில் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து, தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவைச் சேர்ந்த 25 விழுக்காடு குழந்தைகள் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவைக் கல்விக் கட்டணத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil