Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தகத்தில் படித்ததை நேரில் பார்க்க வேண்டும்..! – காஞ்சிக்கே புறப்பட்டுச் சென்ற வாசகர்கள் குழு!

Prasanth Karthick
திங்கள், 26 பிப்ரவரி 2024 (11:23 IST)
பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள் வாசிப்பு பயணம் மேற்கொண்ட குழுவினர் காஞ்சியின் பண்டைய வரலாறு, அரசியல் வரலாறு சார்ந்த பகுதிகளை பார்வையிட்டனர்.



ஸ்மார்ட்போன்களால் இளைய தலைமுறை கெட்டுப்போவதாக சொல்லப்படும் இந்த காலத்திலும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களை கொண்டு ஏராளமானோர் பல நல்ல காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறாக மக்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் முகநூலில் “வாசிப்பை நேசிப்போம்” என்ற குழு செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், கல்லூரி இளம் மாணவர்கள் என சுமார் 76 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக கொண்டு இந்த குழு செயல்பட்டு வருகிறது.

இந்த குழுவினர் கடந்த ஆண்டு முதலாக “வாசிப்பு நடை” என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அப்பகுதியின் வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக பாண்டிச்சேரி, திருநெல்வேலி பயணித்த வாசிப்பு குழுவினர் இந்த முறை காஞ்சிபுரம் பயணம் செய்துள்ளனர்.

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான அக்களூர் இரவி எழுதிய ”கனவு நகரம் காஞ்சிபுரம்” என்ற புத்தகத்தை படித்த குழுவினர், அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளை சுற்றுபயணம் வழியாக நேரடியாக கண்டு அறிந்தனர். இந்த பயணத்தில் எழுத்தாளர் அக்களூர் இரவியும் உடன் பயணித்து ஒவ்வொரு வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

பல்லவ கட்டிடக்கலையின் பிரம்மிப்புகளை அளிக்கும் காஞ்சியின் ஸ்ரீவைகுண்ட நாதர் கோவில் ஐராவதீஸ்வரர் கோவில், மதங்கீஸ்வரர் கோவில் ஆகியவற்றின் வரலாறு, கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றை கேட்டு அறிந்தனர். தொல்லியல் துறையை சேர்ந்த உமாசங்கர் மற்றும் செல்வம் ஆகியோர் இதுகுறித்து குழுவினரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.



பின்னர் இசைவாணர் நைனா பிள்ளை வாழ்ந்த தெரு, சுப்பராய முதலியார் பள்ளியில் உள்ள பழமை வாய்ந்த புத்தர் கற்சிலை, நூற்றாண்டுகளை கடந்த டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி பள்ளி, பட்டுத்தறி கூடம், நிலவொளி பள்ளி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

சனிக்கிழமை இரவு அன்று ஆண்டுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் அருகே உள்ள புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் நடைபெறும் கட்டைக்கூத்து என்ற பாரம்பரியமான நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதில் “பார்வை” என்ற கூத்தை பொ.ராஜகோபால் மற்றும் ஹன்னா எம்.டி.புரூயி ஆகியோர் சேர்ந்து கதை, பாட்டு கலந்து இயக்கியிருந்தனர். கூத்து வடிவத்துடன், நவீன நாடக பாணியையும் இணைத்து பிரிட்டிஷ் காலத்தில் சொல்லப்பட்ட காதல் மற்றும் புரட்சி கலந்த அந்த கூத்து அப்பகுதி கிராமத்தினரையும் வெகுவாக கவர்ந்தது.



பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் குழுவினர் அய்யங்கார் குளம் நடவாவிக் கிணறு, சஞ்சீவிராயர் கோவில், திருப்பருத்திக்குன்றம் திரை லோக்கியநாதர் கோவில், கருக்கினில் அமர்ந்தாள் கோவில், அண்ணா நினைவு இல்லம், காஞ்சி குடில், ராமானுஜர் வாழ்ந்த பகுதியில் உள்ள கிணறு ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

இந்த வாசிப்பு பயணத்தில் காணக்கிடைக்காத பல அரிய வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள முடிந்ததாகவும், அதனுடன் அந்தந்த பகுதிகளை நேரிலேயே பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது சிறந்த அனுபவமாக அமைந்ததாகவும் குழுவினர் தெரிவித்துள்ளனர். வாசிப்பு குழுவின் பயணத்தில் சில பொதுமக்களும் அவர்கள் சொல்லும் வரலாற்று தகவல்களை நின்று கேட்டது, மக்களுக்கு அப்பகுதி வரலாற்றின் மீது இருக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டுவதாகவும், சில மக்கள் இவ்வாறு ஒரு குழு வரலாற்று ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ளதாக அறிந்து நேரில் வந்து வாழ்த்தி, திண்பண்டங்கள் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியதாக வாசிப்பு குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த வாசிப்பு வரலாற்றுப் பயணத்தை ‘வாசிப்பை நேசிப்போம்’ குழுவின் அட்மின் கதிரவன் ரத்தினவேல், எழுத்தாளர் கோமதி சங்கர், ‘சுவடு’ பதிப்பக நிறுவனர் நல்லு லிங்கம், காஞ்சியை சேர்ந்த வாசகர் மாணிக்கவேல் ஆகியோர் ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments