Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடன்குடி மின் திட்டம் ரத்து: விசாரணை கமிஷன் அமைக்க தமிழக அரசு தயாரா? - கருணாநிதி கேள்வி

உடன்குடி மின் திட்டம் ரத்து: விசாரணை கமிஷன் அமைக்க தமிழக அரசு தயாரா? - கருணாநிதி கேள்வி
, புதன், 18 மார்ச் 2015 (15:41 IST)
உடன்குடி மின் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து  விசாரணை கமிஷன் அமைக்க தமிழக அரசு தயாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்விஎழுப்பியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டு திட்டத்தின்கீழ் 8,362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் அனுமதி பெற்று, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, 22–2–2009 அன்று "உடன்குடி பவர் கார்பரேஷன் லிமிடெட்" நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று, அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே அமைந்தது.
 
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், உடன்குடியில் பி.எச்.இ.எல். நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை முழுவதுமாக 2012 ஆம் ஆண்டு ரத்து செய்து விட்டு, தமிழக மின் வாரியம் மட்டும் தனித்தே அந்த திட்டத்தை தொடங்கப்போவதாகவும், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 24–2–2012 அன்று அறிவித்தார்.
 
அந்த அறிக்கையில், "இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக நிறைவேற்றுவதென முடிவு எடுத்துள்ளேன்.
 
இத்திட்டத்திற்கு மொத்த செலவினமான 8,000 கோடி ரூபாயையும், தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பங்கு மூலதனமாக வழங்கும்" என்றெல்லாம் அறிவித்தார். இதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டன.
 
இதில் மத்திய அரசு பொது நிறுவனமான பி.எச்.இ.எல்., மற்றும் சீனாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் உட்பட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த மின் நிலையத்திற்காக திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள 700 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், மின் வாரியத்திற்கு உரிமை மாற்றமும் செய்யப்பட்டது.
 
தனியாருக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள். 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழில்நுட்ப புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டதில், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனமும், "பெல்" (பி.எச்.ஈ.எல்.) நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. தொழில்நுட்ப புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விலைப்புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட வேண்டும்.
 
ஆனால் நீண்ட இழுபறிக்கு பின், 2014 ஆம் ஆண்டு நவம்பரில்தான் விலைப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் பி.எச்.இ.எல்., மற்றும் சீனா நிறுவன டெண்டர்கள் மட்டும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதிகாரிகள் ஒரு முடிவும், அரசு ஒருமுடிவும் தெரிவித்ததால், அந்த டெண்டரை யாருக்கு முடிவு செய்வது என்பதில் குழப்பம் கடந்த ஓராண்டு காலமாக நீடிப்பதாக சொல்லி வந்தார்கள்.
 
மின் வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த நிறுவனத்திற்கு, பணி ஆணை வழங்க, தமிழக அரசுக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டது. உடன்குடி டெண்டர் பற்றிய கோப்புகளை தலைமைச்செயலகத்தில் உள்ள அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகளிடமிருந்து பெற்று, எரிசக்தி துறைச்செயலர் அலுவலகத்தில் பரிசீலித்திருக்கிறார்கள்.
 
மின் வாரிய அலுவலகத்தில் 13–3–2015 அன்று மாலையில் நடைபெறுவதாக இருந்த இயக்குனர் குழுக்கூட்டமும், தலைமைச்செயலகத்திற்கு மாற்றப்பட்டு, அங்கே அந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
 
அந்த கூட்டத்தில் மின் வாரிய தலைவர் சாய்குமார், இயக்குனர்கள் தேவராசன், அண்ணாதுரை, அருள்சாமி, கலைவாணன், தமிழக அரசின் சார்பில் எரிசக்தி துறை, நிதித்துறை, தொழில் துறை செயலாளர்கள் கலந்து கொண்ட போதிலும், சிறிது நேரத்தில் மின்வாரிய இயக்குனர்களை அனுப்பி விட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் கலந்து பேசி, உடன்குடி மின் நிலைய கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டெண்டரை ரத்து செய்து விட்டு, புதிதாக டெண்டர் வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது.
 
டெண்டர் ரத்து செய்யப்பட என்ன காரணம்? "10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த டெண்டரை ரத்து செய்யவும்" என்று வலியுறுத்தல் வந்ததுதான் காரணமா? இந்த இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்த புள்ளி விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்பதால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
 
ஒப்பந்த புள்ளி விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் ஒப்பந்த புள்ளி திறக்கப்பட்டு இவ்வளவு மாதங்கள் முடிவெடுக்காமல் காலதாமதம் ஏன் செய்தார்கள்? உடனடியாக அறிவித்திருக்கலாம் அல்லவா? உடன்குடி அனல் மின்நிலைய கட்டுமான பணிகளை, 2013 ல் தொடங்கி, 2017 ல் முடிக்க, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர்.
 
அதனால் 1,320 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு இருந்தது. தற்போது அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்ட காரணத்தால், புதிதாக டெண்டர் விட்டு, அது யாருக்கு என்பது முடிவாகி, கட்டுமான பணிகள் முடிவுற்று மின்சாரம் கிடைக்க மேலும் நான்காண்டுகள் தாமதமாகும். திட்டச்செலவும் தற்போது 10,121 கோடி ரூபாயிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக அ.தி.மு.க. அரசின் கடும் தாமதம் காரணமாக ஏற்பட்டுள்ளது.
 
2013 ஆம் ஆண்டில் டெண்டர் கோரப்பட்டது. அது எப்போது திறக்கப்பட்டது? திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாதங்களாகின்றன? ஏன் இந்த தாமதம்? தாமதத்திற்கு யார் பொறுப்பு? இந்த தாமதத்திற்கு மின் துறை அமைச்சரும், சில குறிப்பிட்ட அதிகாரிகளும் தான் காரணம் என்பது உண்மையா? தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் காட்டப்படும் உற்சாகம் தான் தாமதத்திற்கும், இறுதியில் ரத்து செய்ததற்கும் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா? இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு கோடி ரூபாய்? இந்த இழப்புக்கு யார் காரணம்? மின்சார வாரியமா? தலைமைச்செயலக உயர் அதிகாரிகளா?
 
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை முறைப்படி நிறைவேற்றியிருந்தால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது அல்லவா? அவ்வாறு மின் பற்றாக்குறை ஏற்பட்டதால்தானே, வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது?
 
மக்கள் மத்தியில் இந்த கேள்விகளுக்கெல்லாம் விளக்கமளித்திட தமிழக அரசு முன் வருமா? இந்த ஒரு டெண்டரில் மட்டும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விருப்பு, வெறுப்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்; இந்த அரசினர் அதைச்செய்வார்களா? இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil