Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
, ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2014 (14:49 IST)
ஒரு மரத்தை வெட்டினால் அதற்குச் சமமாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற உத்தரவை அரசு அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.பி.ஸ்ரீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
 
 நான் வளர்புரம் கிராமத்தில் வசித்து வருகிறேன்.  ஸ்ரீ பெரும்புதூர் தாலுகாவில் உள்ள வளர்புரம், மன்னூர், பெரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள மரங்களை அரசு அதிகாரிகள் வெட்டி வருகின்றனர். தக்கோலம் - தண்டலம் சாலையை விரிவுபடுத்துவதற்காக 100 முதல் 150 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
 
இந்த மரங்களை வெட்டும்போது எங்கள் கிராமத்துக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செல்லும் குடிநீர் இணைப்புக் குழாய்கள், மின்சார வயர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.  விதிகளை மீறி 150 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டித்தள்ளும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீது தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணை நடந்தது.
 
விசாரணையின்போது, அரசு வழக்குரைஞர் ஆஜராகி வாதிட்டதாவது: ஒரு மரத்தை வெட்டினால் அதற்குச் சமமாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
 
அந்த உத்தரவு அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு, அதைப் பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 
 
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட சுற்றிக்கையை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.
 
இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவது தொடர்பான அறிக்கையைப் புகைப்படங்களுடன் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். மேலும், பழைமையான மரங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil