தமிழக சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தி.மு.கவினர் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், புதன்கிழமையன்று நடந்த அமளியை அடுத்து, திமுக உறுப்பினர்கள் 80 பேர், அவையிலிருந்து ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று அவைக்கு வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களை பேரவை வளாகத்திற்கு அனுமதிக்காததைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல இன்றும் சட்டப்பேரவைக்கு காலை 9.30 மணியிலிருந்தே திமுக எம்.எல்.ஏக்கள் வர ஆரம்பித்தனர். மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வந்த பிறகு, 4ஆம் எண் வாயிலுக்கு அருகில் போட்டி சட்டமன்றத்தை தி.மு.கவினர் நடத்தினர்.
துரைமுருகன் சபாநாயகரைப் போல செயல்பட, தி.மு.கவினர் இரு பிரிவுகளாகப் பிரிந்து கேள்விகளை எழுப்பினர்.
மக்கள் பிரச்சனைகளை எப்படி முன்வைப்பது என்று காட்டுவதற்காகவும், சபையை எப்படி நடத்த வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகவுமே இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக உறுப்பினர்கள் சிலர் கிண்டல் செய்வதைப் போல நடந்துகொண்டபோது, தங்களை மக்கள் கவனித்துக்கொண்டிருப்பதாக துரைமுருகன் குறிப்பிட்டார்.
இந்த போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தில், வெள்ளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டன. பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பினர்.
''சட்டப்பேரவைக் கூட்டம் இப்படிதான் நடத்தப்பட வேண்டும்'':
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "சட்டப்பேரவைக் கூட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் காரணமாக, இன்று சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
தமிழக சட்டப்பேரவை நடத்தப்படும் போக்கைக் கண்டித்து வரும் 22ஆம் தேதி முதல் தமிழகமெங்கும் பொதுக் கூட்டங்களை நடத்த திமுக முடிவுசெய்துள்ளது.
மீண்டும் மறுத்தார் சபாநாயகர்:
இதனிடையே, இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இடைநீக்கம் செய்யப்படாத திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் இன்று சபாநாயகர் தனபாலிடம் மீண்டும் கோரிக்கை வைத்தனர். ஆனால், மறுபரிசீலனை செய்ய முடியாது என சபாநாயகர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து, அவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.