Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய பட்ஜெட்-புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: வைகோ கருத்து

மத்திய பட்ஜெட்-புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: வைகோ கருத்து

மத்திய பட்ஜெட்-புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: வைகோ கருத்து
, திங்கள், 29 பிப்ரவரி 2016 (23:42 IST)
மத்திய அரசின் பொது நிதி நிலை அறிக்கையில், புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2016-17 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவையே இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.

பொருளாதார வளர்ச்சி என்பதை 8.6 விழுக்காடு இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது பொய்த்துப் போனது. பொருளாதார வளர்ச்சி 7.6 விழுக்காடு அளவுதான் எட்டப்பட்டு இருக்கிறது. பணவீக்க விகிதம் குறைந்தாலும் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. இணையதள வர்த்தகம், முன்பேர வணிகத்தால் பருப்பு விலை மூன்று மடங்கு உயர்ந்து போனதைத் தடுக்க முடியாத மத்திய அரசு பருப்பு விலையைக் கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வது ஏமாற்று வேலை.

விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆக்கப் போகிறார்களாம். அந்த இலக்கை அடைவதற்கு முன்வைத்துள்ள திட்டங்கள் என்ன? கடந்த 13 ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டரை இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மோடி அரசிலும் இதே நிலைமைதான் தொடருகிறது.

விவசாயத் துறையை கார்ப்பரேட் மயம் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கி உள்ள நிதி போதுமானது அல்ல. பாரம்பரிய வேளாண்மையை அழிக்கும் வகையில் மரபணு மாற்றுப் பயிர் சாகுபடிக்கு அனுமதி அளித்துவிட்டு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்போம் என்று தெரிவித்துள்ளது முரணாக இருக்கிறது.

உலக வங்கி கட்டளைக்கு அடிபணிந்து உரத்துக்கான மானியங்களை வெட்டியதால் ரசாயன உரங்கள், யூரியா விலைகள் பன்மடங்கு உயர்ந்து விட்டன. இந்நிலையில் உர மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமற்றது.

இந்திய உற்பத்தித் துறையில் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பளித்து வரும் சிறு, குறு தொழில்துறை நலிந்து வருவதைக் காப்பாற்ற மத்திய அரசு முனைப்பான நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு தொழில் நிறுவனங்களுக்கான உற்பத்தி வரி விலக்கு வரம்பை 1.5 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருந்தால் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், 2 கோடி ரூபாய் என்று மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிதாக சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு 3 ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு அந்நிய நிறுவனங்களுக்குச் சாதகமானது ஆகும்.

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யவும் வங்கித் துறையை முற்றிலும் தனியார் மயமாக்கவும் தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காகவே பங்கு விலக்கல் துறையின் பெயர் முதலீடு மற்றும் பொதுச் சொத்துத் துறை என்று மாற்றப்படுகிறது.

பங்கு சந்தையை மையப்படுத்தியும், அந்நிய முதலீடுகளை நம்பியும் இந்தியப் பொருளாதார சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் 13,414 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது.

ஆனால், பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை விரிவுபடுத்தி வருகிறது. உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படாததால் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது ஏற்கக் கூடியதல்ல.

கிராமப்புற மூத்த குடிமக்களுக்குக் காப்பீடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத் தொழில் முனைவோருக்குத் தேசிய மையம், சிறுநீரக டயாலிசிஸ் இயந்திரங்களுக்கு உற்பத்தி வரி நீக்கம், நில ஆவணங்கள் மின்னணு மயமாக்குதல் போன்ற சில வரவேற்கத்தக்கவை ஆகும்.

ஆனாலும், மத்திய வரவு-செலவு அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil