கடந்த மூன்று நாட்களாக புழக்கத்தில் உள்ள புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து டாஸ்மாக்கில் 2 குவாட்டர் வாங்கிவிட்டு மீதி பணத்தையும் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் ஒரு குடிமகன்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி இந்தியன் வங்கி கிளையில், மருதாடு டாஸ்மாக் கடை விற்பனையாளர் வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை செலுத்தினார்.
பணத்தை வாங்கிய வங்கி அலுவலர் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை ஆய்வு செய்துள்ளார். அப்போது, சந்தேகப்படும்படியாக இருந்த புதிய 2000 ரூபாய் நோட்டை தனியாக எடுத்து ஆய்வு செய்துள்ளார். அப்போது, அது வெறும் கலர் ஜெராக்ஸ் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, வங்கி ஊழியர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் டாஸ்மாக் ஊழியரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, இரவு 9.30 மணியளவில் டாஸ்மாக் கடைக்கு ஒருவர் ஓடி வந்ததாகவும், பஸ் வரப்போகிறது, சீக்கிரமாக 2 குவாட்டர் கொடுங்க என்று 2000 ரூபாய் நோட்டை நீட்டியதாகவும், இதனை உண்மை என்று நம்பி, 2000 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு சரக்கையும் கொடுத்து மீதி 1,800 ரூபாய் பணத்தையும் கொடுத்தாகவும் டாஸ்மாக் ஊழியர் போலீசாரிடம் தெரிவித்தார்.