மீண்டும் டிசம்பர் கனமழை: ரமணன் அடித்து சொல்கிறார்!
மீண்டும் டிசம்பர் கனமழை: ரமணன் அடித்து சொல்கிறார்!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையையே புரட்டி போட்டது கனமழை. தமிழகத்தின் பல இடங்களில் மழை பாதிப்பு இருந்தது. சென்னை மழையால் ஒட்டு மொத்த இந்தியாவின் பார்வையே தமிழகத்தின் மீது தான் இருந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்த வருடம் டிசம்பர் மாதம் கனமழை பெய்யும் என ஓய்வு பெற்ற வானிலை இயக்குனர் ரமணன் கூறியுள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே பேசிய ரமணன் கணினி சார்ந்த கணிப்புகளை வைத்து பார்க்கும்போது வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்கு பிறகு மழை வரக்கூடும் என்றும் நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் குறைந்தது 10 செ.மீ. வரையும் மற்ற உள் மாவட்டங்களில் 2 செ.மீ. வரையும் மழை பெய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ரமணன் கணித்த வானிலை அறிக்கையின் படியே கனமழை பெய்தது. அதே போல இந்த ஆண்டும் கூறியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீபத்தில் ஆற்காடு பஞ்சாங்கத்திலும் இந்த ஆண்டு டிசம்பரில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.