Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேர் அதிரடி பணிமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேர் அதிரடி பணிமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
, புதன், 1 ஜூலை 2015 (03:24 IST)
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

 
இது குறித்து, தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு சாலைப்பிரிவு திட்ட முன்னாள் இயக்குனர் அனில் மேஷ்ராம், மாநில திட்டக் கமிஷனின் உறுப்பினர் செயலாளராக இடமாற்றம் செய்யப்படுகிறார். மாநிலங்களுக்கு இடையேயான பணியில் இருந்து திரும்பியுள்ள ஆர்.லால்வேனா, சமூகப் பாதுகாப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் எஸ்.மதுமதி, தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஷம்பு கலோலிகர், தமிழ்நாடு சுகாதார முறைத் திட்ட இயக்குனராக மாற்றப்படுகிறார்.
 
நகர நில உச்சவரம்பு மற்றும் நகர நிலவரி கமிஷனர் பி.அண்ணாமலை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலத்துறை முதன்மைச் செயலாளரும் (பொறுப்பு), மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முதன்மைச் செயலாளருமான பி.சிவசங்கரன், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் முதன்மைச் செயலாளராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முதன்மைச் செயலாளரும் (பொறுப்பு), கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலாளருமான நசீமுதின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் செயலாளரும், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் செயலாளருமான (பொறுப்பு) குமார் ஜெயந்த், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் செயலாளராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
சிட்கோ (சிறுதொழிற்சாலைகள் மேம்பாட்டுக் கழகத்தின்) இயக்குனர் ஜக்மோகன் சிங் ராஜு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்படுகிறார்.
 
மத்திய அரசுப்பணியில் இருந்து திரும்பியுள்ள எஸ்.ஸ்வர்னா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
 
தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைகள் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கா.பாலச்சந்திரன், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகத்தின் நிர்வாக இயக்குனராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டுள்ளார்.
 
வணிகவரி இணைக் கமிஷனர் எஸ்.மலர்விழி, சிவகங்கை கலெக்டராக மாற்றப்படுகிறார். முதலமைச்சர் அலுவலகத் துணைச் செயலாளர் எஸ்.ஏ.ராமன், நில நிர்வாக இணைக் கமிஷனராகப் பணி மாற்றம் செய்யப்படுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்ற இந்தத் தருணத்தில், 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசு நிர்வாகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil