Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரீஸ் நாட்டுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழக அரசுக்கும் ஏற்படும்: எச்சரிக்கை மணியடிக்கும் அன்புமணி

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (00:11 IST)
தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை மேலும் உயர்ந்தால், கிரீஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைதான் தமிழக அரசுக்கு ஏற்படும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி மாநில தலைவருமான அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் அரசு பன்னாட்டு வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத காரணத்தினால், பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இக்கடன் சுமையிலிருந்து வெளியேவர உதவ ஐரோப்பிய நாடுகளோ, பிற உலக நாடுகளோ முன்வரவில்லை.
 
கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள அந்த நாடுகள், அவற்றை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தால் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று கூறி விட்டன. அவற்றை ஏற்றால் கடன் தரும் நாடுகளுக்கு கிரீஸ் நாடு அடிமையாக மாறி விடும் நிலைமை ஏற்பட்டுவிடும். இது போன்ற ஒரு சூழ்நிலையை நோக்கித்தான் தமிழகம் சென்று கொண்டுள்ளது. மக்கள் தொகை, பொருளாதாரம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் நிலைமை கிரீஸ் நாட்டை விட மோசமாகத் தான் உள்ளது.
 
கிரீஸ் நாடு கடன் சுமையில் சிக்கியதற்கு வளர்ச்சி விகிதம் குறைந்தது, நிதிப்பற்றாக்குறை அதிகரித்தது, அரசின் கடன் அதிகரித்தது, நிதிநிலை கணிப்புகள் பொய்த்துப்போனது, புள்ளிவிவர குளறுபடிகள் ஆகிய 5 அம்சங்களே முக்கியக்காரணங்கள் ஆகும்.
 
தமிழக அரசின் நேரடிக்கடன் சுமை ரூ.2,11,483 கோடி, பொதுத்துறை நிறுவனங்களின் உத்தேசக் கடன் ரூ.2,01,000 கோடி என மொத்த கடன் சுமை ரூ.4,07,748 கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் நேரடிக்கடனுக்காக ரூ. 17,856 கோடி, பொதுத்துறை நிறுவங்களின் கடனுக்காக சுமார் ரூ.17 ஆயிரம் கோடி என ஆண்டுக்கு ரூ.35,000 கோடியை வட்டியாக மட்டும் தமிழக அரசு செலுத்துகிறது. இது தமிழக அரசின் வருவாயில் மூன்றில் ஒரு பங்காகும்.
 
இது தவிர  இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கு ரூ. 49,068 கோடி, ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.51,741 கோடி செலவிடப்படுகிறது. தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயும் இதற்கே செலவாகிறது. இதன் காரணமாக, மற்றத் திட்டங்களைச் செயல்படுத்த கடன் வாங்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
 
தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை படிப்படியாக அதிகரித்து நடப்பாண்டில் ரூ.31,829 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், கிரீஸ் அரசுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஏற்படும்.
 
இந்த நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால், ஊழல் இல்லாத, வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி வருவாயை பெருக்கும் திறன் கொண்ட, நிர்வாகத்திறமை கொண்ட அரசு அமைக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசை அமைத்து தமிழகத்தை மீளாக்கடன் சுமையிலிருந்து மீட்க பாமக போராடும் என்று தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments