Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”பொய்யான தகவல்களை பரப்புவதில்தான் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது” - ராமதாஸ் குற்றச்சாட்டு

”பொய்யான தகவல்களை பரப்புவதில்தான் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது” - ராமதாஸ் குற்றச்சாட்டு
, வியாழன், 8 அக்டோபர் 2015 (22:22 IST)
பொய்யான தகவல்களை பரப்புவது போன்ற செயல்களில் தான் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரசு பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கின்றனர்.
 
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
 
ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
 
இப்போராட்டங்கள் பயனளிக்காத நிலையில் இன்று வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக பல வாரங்களுக்கு முன்பே ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. மாணவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தமிழக முதலமைச்சரோ, கல்வி அமைச்சரோ ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும்.
 
ஆனால், தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. அதனால் ஆசிரியர்கள் திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
 
இவ்வளவுக்குப் பிறகும் கூட இந்த போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மாறாக ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி போராட்டத்தை சிறுமைப்படுத்துவது, பள்ளிகள் வழக்கம் போல இயங்கின என்று பொய்யான தகவல்களை பரப்புவது போன்ற செயல்களில் தான் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.
 
உண்மையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சத்துணவு ஊழியர்கள் பெயரளவில் பள்ளிகளை திறந்து வைத்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்துவதை பெரும் அவமானமாக அரசு கருத வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை என்பதால் அவர்களின் போராட்டத்தை பாமக ஆதரிக்கிறது.
 
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜாக்டோ அமைப்பினர் சென்னையில் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் நான் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தேன். ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக வரைவுத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
 
பாமக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் இவை நிறைவேற்றப்படும் என மீண்டும் உறுதி அளிக்கிறேன். அதேநேரத்தில், ஆசிரியர்களை குறையில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
 
எனவே, தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil