Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
, புதன், 2 செப்டம்பர் 2015 (12:27 IST)
தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்திப் பகுதியில் மீன்பிடிக்க ஏதுவாக ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது மத்திய பாஜக அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
 
 இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து 31.08.2015 திங்கட்கிழமை அதிகாலை 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் 288 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
 
அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 3 படகுகளில் இருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து 16 மீனவர்களையும், 3 படகுகளையும் சிறைப்பிடித்தனர். இலங்கை கடற்படையின் இது போன்ற செயல்கள் மனிதாபிமானமற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
 
இலங்கை அரசும் அந்நாட்டு கடற்படையின் அட்டகாசத்தை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பது என்பது அந்த அரசின் நியாயமற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. மத்திய பாஜக அரசு மெத்தனப்போக்கை கைவிட்டு நம் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும்.
 
எனவே இலங்கை கடற்படையின் தொடர் அராஜகம் குறித்து அந்நாட்டு அரசிடம் மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேலும் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து ஒரு சுமூக தீர்வு கிடைக்கும் வரை, தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பாரதப் பிரதமர் இலங்கை பிரதமரை வலியுறுத்த வேண்டும்.
 
எனவே தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்திப் பகுதியில் மீன்பிடிக்க ஏதுவாக ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது மத்திய பாஜக அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலில் அச்சமின்றி ஈடுபடுவதற்கு ஒரு நிரந்தர, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இவ்வாறு இந்த அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil