Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராமதாஸ்

பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராமதாஸ்
, ஞாயிறு, 22 நவம்பர் 2015 (12:03 IST)
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாற்றியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவி வருவதும், அந்த நோய்களுக்கு அப்பாவி மக்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதும் மிகுந்த கவலை அளிக்கிறது.
 
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் ஆண்டு தோறும் தமிழகத்தில் பரவுவது வாடிக்கையாகி விட்டது.
 
கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
 
டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலையில் சென்னை மருத்துவ மனைகளில் மட்டும் 545 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
டெங்கு காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் திருச்சி மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர்.
 
நேற்று முன்நாளில் மட்டும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தீபா, கரூரைச் சேர்ந்த சந்திரா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஜாஹீர் ஹுசைன் ஆகிய 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இன்னும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சாப்பிடுவதற்கான டாமிஃபுளு மாத்திரைகள் கூட போதிய அளவில் இருப்பு வைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
 
மற்றொரு பக்கம் மழை பாதிப்புகள் காரணமாக சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.
 
சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 1955 பேர் காய்ச்சலுக்காகவும், 113 பேர் வயிற்றுப் போக்குக்காகவும் சிகிச்சை பெற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி ஒப்புக் கொண்டிருக்கிறது.
 
அதிலும் குறிப்பாக வட சென்னையிலுள்ள தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோயின் பாதிப்பு மிகஅதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலும் மழை சார்ந்த நோய்கள் வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட போதிலும், போதுமானது அல்ல.
 
நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான மருத்துவம் அளிக்கும் வசதிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவதுடன், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil