Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் முன்பு போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் முன்பு போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (00:33 IST)
கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில் சில சர்க்கரை ஆலைகளில் சிறப்பு அரவைப் பருவம் தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, முண்டியம்பாக்கம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு அரவை தொடங்கியுள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒரு டன் கரும்புக்கு ரூ.1700 மட்டும் தான் உத்தரவாத விலையாக தரமுடியும் என்று அறிவித்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
 
நடப்பாண்டில் ஒரு டன் கரும்பு சாகுபடி செய்வதற்கு ரூ.2120 செலவு ஆவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்திருக்கிறது. அத்துடன் உழவர்களுக்கான லாபம் 50% சேர்த்து ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக குறைந்தபட்சம் ரூ.3180 வழங்குவது தான் சரியாக இருக்கும்.
 
கரும்புக்கான வெட்டுக்கூலி உள்ளிட்ட செலவுகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டதை விட பல மடங்கு அதிகம் என்பதால் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுதான் உழவர்களின் குரலாகவும் உள்ளது. ஆனால், உழவர்கள் கோரும் கொள்முதல் விலையில் பாதி கூட கிடைக்காத நிலை உள்ளது.
 
தமிழ்நாட்டில் 2013-2014, 2014-201ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2650 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகளில் ரூ.2200 முதல் ரூ.2300 வரை மட்டுமே வழங்கப்பட்டது. 2015-2016 ஆம் ஆண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 2300 என மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் தமிழக அரசின் ஊக்கத்தொகை ரூ.650 சேர்த்து ஒரு டன்னுக்கு ரூ.2950 வழங்கப்பட வேண்டும். ஆனால், அதைவிட ரூ.1250 குறைவாக ரூ.1700 மட்டுமே வழங்கப்படும் என அந்த தனியார் சர்க்கரை ஆலை அறிவித்திருப்பது முறையல்ல.
 
வெளிச்சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்தால், கரும்பு விலையை ரூ.2300 ஆக உயர்த்தி வழங்குவதாக அந்த ஆலை கூறியுள்ளது. ஆனால், இதற்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும் இதே விலையை வழங்க முடிவு செய்திருப்பதாகவும், இதை தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவித்து விட்டதாகவும் சர்க்கரை ஆலைகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
 
கரும்புக்கான கொள்முதல் விலையை குறைத்து வழங்குவதற்கு சர்க்கரை ஆலைகள் தரப்பில் பல காரணங்கள் கூறப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைக்கு 5% மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டிருப்பதால் சர்க்கரையின் அடக்கவிலை அதிகரித்து விட்டது.
 
ஆனால், சந்தைவிலை மிகவும் குறைவாக உள்ளது. மற்ற மாநிலங்களில் சர்க்கரை மீது மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படாததால் அங்கு உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை தமிழகத்தில் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. அதேபோல், மது தயாரிப்பதற்கான எரிசாராயத்தை தமிழகத்திலுள்ள சர்க்கரை ஆலைகளில் இருந்து தான் மது ஆலைகள் வாங்கி வந்தன.
 
ஆனால், எரிசாராயத்தின் மீது 14% மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டு இருப்பதால், அதன் அடக்கவிலை அதிகரித்து விட்டது. அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் எந்த வரியும் விதிக்கப்படாததால், தமிழகத்தில் உள்ள மது ஆலைகள் குறைந்த விலையில் கிடைக்கும் எரிசாராயத்தை குறைந்த விலையில் வாங்கி வைத்துக் கொள்கின்றன. இதனால் சர்க்கரை, எரிசாராயம் ஆகிய இரண்டுமே விற்பனை ஆகாத நிலையில், சர்க்கரை ஆலைகள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. அதனால் தான் இந்த ஆண்டு கரும்புக்கு கூடுதல் விலை வழங்க முடியவில்லை’’ என சர்க்கரை ஆலைகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த காரணத்தை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது.
 
அதேநேரத்தில், ஒரு டன் கரும்பிலிருந்து சர்க்கரை, எரிசாராயம், சக்கை உள்ளிட்டவை மூலம் சர்க்கரை ஆலைகளுக்கு கிடைக்கும் வருவாய் ரூ.20,500 என்று வேளாண் பல்கலைக்கழகத்தின் இன்னொரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது கரும்புக்கு விவசாயிகள் கோரும் விலையை வழங்குவதில் எந்த தடையும் இருக்க முடியாது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய தமிழக அரசுக்கு இன்னும் உறக்கம் கலையவில்லை. ஒரு டன் கரும்புக்கு ரூ.1,700 மட்டுமே வழங்கப்படும் என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
 
எனவே, உழவர்களின் கோரிக்கையை ஏற்று கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4,000ஆக உயர்த்த வேண்டும்; உழவர்களுக்கு ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.1000 கோடி பாக்கித் தொகையையும் வசூலித்து வழங்க வேண்டும்.
 
அதே வேளையில், சர்க்கரை ஆலைகளின் சுமையை குறைக்கும் வகையில் சர்க்கரை மற்றும் எரிசாராயத்தின் மீதான மதிப்பு கூட்டு வரியை அரசு நீக்க வேண்டும்.
கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போராட்டம் நடத்தப்படும்.
 
போராட்டம் நடைபெறும் நாள், பங்கேற்போர் விவரங்கள் அடுத்த சில நாட்களில் முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil