Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சாக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாம் தமிழர்கள்: சுப.வீரபாண்டியனின் ஆவேச பதிவு

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (22:35 IST)
காவிரி தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான சுப.வீரபாண்டியனின் பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த தொலைக்காட்சியில் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த பேட்டியை அளித்த சுப.வீரபாண்டியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த பேட்டி குறித்து ஒரு நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் பின்வருமாறு
 
கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே,  இப்பதிவை என் முகநூலில்  வெளியிட முடிவெடுத்தேன். 
 
கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று  வெளியானது. அதற்கு இத்தனை பின்விளைவுகள் இருக்குமென்று அப்போது நான் நினைக்கவில்லை. என்னிடம்  வினாக்களைத் தொடுத்த மதன் என்னும் இளைஞர், 'இடக்கு மடக்கான' பல வினாக்களை என்னிடம் கேட்டார். சில வினாக்களுக்கு விடை சொல்வதில், எனக்குச் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்தன. .
 
 நான் விடை சொல்வதற்கு முன்பே அடுத்த கேள்வியைக் கேட்டுவிடும் அவரது போக்கை மனத்தில் வைத்துக் கொண்டு, நீங்களெல்லாம் நண்பர் பாண்டேயிடம் பாடம் படித்துக் கொண்டு வருகின்றீர்களோ?   என்று நேர்காணல் முடிந்தபின், வேடிக்கையாகக் கேட்டேன். எப்படி இருந்தாலும், வளரும் இளைஞர் நீங்கள், வளருங்கள் என்று வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தேன். 
 
அடுத்தநாள் தொடங்கி, இரண்டுவிதமான பின்விளைவுகளை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நேர்காணலை, என்னை விரும்பாதவர்கள், எனக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்கள் கொண்டாடினார்கள். குறிப்பாக, பாஜக வினரும், நாம் தமிழர் கட்சியினரும் அதனைப் பரப்பினார்கள். நான் விடை சொல்ல முடியாமல் தடுமாறியதாகவும், என் நிலை பரிதாபமாக இருந்ததாகவும்  பதிவுகள் இட்டனர்.  நேர்காணலில் நான் தொற்றுப் போய்விட்டதாக எழுதினர்.
 
பாஜக வை விட என்னை எதிர்ப்பதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நாம் தமிழர் தம்பிகள்தாம். ஆர்எஸ்எஸ் நண்பர்களாவது என்னை எதிர்ப்பதும், மிரட்டுவதுமாக இருப்பார்கள். ஆனால் நாம் தமிழர்கட்சியினரோ, நான் இறந்துபோய்விட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தம்பி சீமானே ஒரு பேட்டியில்,, அவர் (நான்) இறந்துபோய்விட்டார்  என்று 
சொன்னார். உடனே அவர் தம்பிகள் அடுத்தநாள், என் படத்திற்கு மாலை அணிவித்தும், சவப்பெட்டியில் என் உடல் இருப்பது போன்று படத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தும் மகிழ்ந்தனர். சீமான் மேடையில் இருக்கும்போதே, அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர், பாளையங்கோட்டையில், திமுக வை நான் ஆதரிப்பது குறித்துப் பேசுகையில்,  நாயினும் கீழாய் நக்கிப் பிழைக்கும் ஈனப்பிறவி சுபவீ என்று பேசினார். சீமான் கண்டித்ததாய்த் தெரியவில்லை. (மகிழ்ந்திருப்பாரோ!)
 
இப்படி ஒரு சாரார் அந்த நேர்காணல் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்க, என்னிடம் அன்பு கொண்ட நண்பர்கள் பலர் வருத்தப்பட்டனர். அந்த நேர்காணலுக்கு நீங்கள் போயிருக்கக் கூடாது என்றனர். இவ்வளவு மென்மையாகப் பேசியது சரியில்லை என்றனர். நீங்கள் தோற்றுப் போய்விட்டதாக வலதுசாரியினர் மகிழ்வதற்கு இடம் கொடுத்து விட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டனர். 
 
எல்லா நேரமும் நாமே வெற்றிபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவது கூட ஒரு விதமான பாசிசம்தான், ஒருமுறை தோற்றால்  குற்றமில்லை என்று நான் சமாதானம் சொன்னேன். 
 
இவையெல்லாம் ஒருபுறமிக்க, காவேரி தொலைக்காட்சியில் நான் எதிர்பாராத வேறு சில  நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சில  நாள்களுக்குப் பிறகுதான் அது எனக்குத் தெரிய வந்தது. அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த திரு ஜென்ராம், அந்தப் பேட்டி குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அங்கு பணியாற்றிய சில பெண் ஊடகவியலாளர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மறுநாள் கருப்பு உடையுடன் அலுவலகம் வந்துள்ளனர். தங்கள் எதிர்ப்பையும் வலைத்தளங்களில்  பதிவிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஜென்ராம் அவர்களை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவர் மறுத்துவிட்டார். 
 
இதனால் கோபம் மொண்ட நிர்வாகம், ஜென்ராம் அவர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, 23.07.19 அன்று பணி  நீக்கம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஊழியர்களும்  வேலைக்குச் செல்லவில்லை. இந்த  நிலையில், காவேரி தொலைகாட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சோஷலிச தொழிலாளர் மையம் கண்டன அறிக்கை விடுத்துள்ளது. நண்பர் வன்னி அரசு போன்றவர்கள்,ஜென்ராம் அவர்கள்  மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து,   இனிமேல் காவேரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர்.  . 
 
நான் மிகவும் மதிக்கும் மூத்த ஊடகவியலாளரான ஜென்ராம் அவர்களும், நான் அறிந்திராத அந்தப் பெண் ஊடகவியல் நண்பர்களும், என் மீது கொண்டுள்ள அன்பும் மதிப்பும் என்னை நெகிழ வைக்கின்றன. அந்தப் பெண்களை நினைக்கும்போது, நான் பெற்ற பிள்ளைகளை விட, பெறாத பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதை உணர முடிகிறது. 
 
நான் நேர்காணலில் தோற்றுப்போனேன் என்று  எண்ணி மகிழ்கின்ற என் இனிய எதிரிகளே! நேர்காணலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்பதை உங்களுக்குக்  காலம் உணர்த்தும். 
 
ஆனால் நான் இன்னொரு விதத்தில் தோற்றுத்தான் போனேன் என்பது உண்மை. யாருக்கோ எதோ ஒரு மரியாதைக்  குறைவு நடந்தால் நமக்கென்ன என்று இருக்காமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்திய தோழர் ஜென்ராமுக்கு  எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்ற வினாவிற்கு விடை தெரியாமல் தோற்றுப்போனேன். அவரை விடுங்கள், அவராவது என் நண்பர், அந்தப் பெண் பிள்ளைகள் யார், அவர்களுக்கு நான் இதுவரையில் என்ன செய்திருக்கிறேன்? அவர்கள் ஏன் எனக்காகத் தங்கள் பணியிலும், வாழ்விலும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்? 
 
கண்கள் கலங்குகின்றன. அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும், கருத்துரிமையின் மீது அவர்கள்  வைத்திருக்கும் மதிப்புக்கும் முன்னால்  நான் தோற்றுத்தான் போனேன்!
 
இவ்வாறு சுப.வீரபாண்டியன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments