Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம் கூடாது: ராமதாஸ் அறிக்கை

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம் கூடாது: ராமதாஸ் அறிக்கை
, வியாழன், 17 ஜூலை 2014 (19:01 IST)
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம் கூடாது. மாறாக தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 7 முதல் 13 ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடப் பட வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இச்செயலை ஒருவகையான மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
 
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படவிருப்பது இதுவே முதல்முறை என்று சுற்றறிக்கையில் உணர்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை நடத்தப்படாத ஒரு நிகழ்வை இப்போது திடீரென கொண்டாடும்படி கட்டாயப்படுத்துவதற்கான தேவை என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, சமஸ்கிருத வாரத்தையொட்டி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் என பலதரப்பட்டவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள போட்டிகளைப் பார்க்கும் போது அவை சமஸ்கிருத மொழியையும், அது சார்ந்த கலாச்சாரத்தையும் திணிப்பதற்கான முயற்சியாகவேத் தோன்றுகிறது.
 
சமஸ்கிருதம் என்பது இந்தியாவில் ஒருசாராரின் மொழியாகவும், கலாச்சார அடையாளமாகவுமே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 14 ஆயிரம் பேர் மட்டுமே அம்மொழியை பேசுவதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. இத்தகைய சூழலில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளைப் பேசி, தனித்தனி கலாச்சாரத்தைக் கடைபிடிக்கும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் மீது சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிக்க முயல்வதை ஏற்க முடியாது.
 
உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருப்பதுடன், 10 கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படும் தமிழை விட இனிமையான, செழுமையான, பழமையான மொழி உலகில் இருக்க முடியாது. ஒருவேளை மொழிகளை வளர்ப்பதில் மத்திய அரசுக்கும், இடைநிலைக் கல்வி வாரியத்திற்கும் அக்கறை இருக்குமானால் அது அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அதைவிடுத்து மொழிகளில் பாகுபாடு காட்டுவது சரியான அணுகுமுறையல்ல.
 
எனவே, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாறாக, தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil