Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்களை கடத்திய காவலர்கள் கைது

ரூ.6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்களை கடத்திய காவலர்கள் கைது
, செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (18:14 IST)
தாம்பரம் அருகே லாரியை மடக்கி ரூ.6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்களை கடத்திச் சென்றதாக சென்னை ஆயுதப்படை காவலர் உள்பட 4 பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட்டில் மருந்து மூலப் பொருள்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
 
இந்த நிறுவனம் சர்க்கரை ஆலை கழிவுப் பொருளான மொலாசஸில் இருந்து "எபிட்ரின்' என்ற ஆஸ்துமா உள்ளிட்ட சில நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் மூலப்பொருளைத் தயாரித்து சுவிட்சர்லாந்து, இராக் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
 
இந்த நிலையில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு 3 லாரிகளில் தலா 1,000 கிலோ மதிப்புள்ள எபிட்ரின் மருந்து மூலப்பொருள்கள் ஏற்றுமதி செய்ய சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
 
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வல்லக்கோட்டை சந்திப்பு வழியாக தாம்பரம் நோக்கி அந்த லாரிகள் சென்றன.
 
2 லாரிகள் சென்றுவிட்ட நிலையில், கடைசியாக வந்த லாரியை மலைப்பட்டு கிராமத்தில் இரவு 12.30 மணிக்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் மடக்கினர்.
 
லாரியை, மோசூர்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (26) ஓட்டி வந்தார். அதில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அதிகாரியாக கண்ணபிரான் (52) உடன் வந்தார்.
 
லாரியை வலுக்கட்டாயமாக கடத்திய அந்த மர்ம நபர்கள், ஓட்டுநர் தினேஷையும், கண்ணபிரானையும் தாக்கிவிட்டு 600 கிலோ எடையுள்ள மருந்துப் பொருள்களை எடுத்துக் கொண்டு, லாரியை அப்படியே விட்டுவிட்டு, காரில் தப்பினர்.
 
அதே தினத்தில் இரவு ரோந்துப் பணியில் இருந்த பாலுசெட்டிச்சத்திரம் காவல்துறையினர் அந்த காரை மடக்கினர். அப்போது, அதில் இருந்த ஒரு நபர், தான் காவலர் என்றும், அதற்கான அடையாள அட்டையையும் காட்டினார்.
 
அதனால் அப்போது காவல்துறையினர் அவர்களை விட்டுவிட்டனர். இந்த நிலையில், மருந்து மூலப் பொருள்கள் கடத்தப்பட்டதாக லாரி பாதுகாப்பு அதிகாரி கண்ணபிரான் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர்.
 
இந்த நிலையில், வேலூர் வந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சென்னை ஆயுதப்படை காவலர் கார்த்திகேயனிடம் (37) காவல்துறையினர் விசாரித்ததில் அவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது.
 
மேலும் அவர் கூறியதன் அடிப்படையில், வேலூரைச் சேர்ந்த ஜார்ஜ் (27), பாலாஜி (27), கார்த்திக் (30) ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மேலும், அவர்களிடம் இருந்து ரூ. 6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்கள், கார்கள் கைப்பற்றப்பட்டன.
 
கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட மற்றொரு காவலர் செல்வக்குமார் உள்பட 8 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil