சிவகார்த்திகேயன் நடிப்பில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ரெமோ.
இதனால் படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பேசிய சிவகார்த்திகேயன், திரைப்படம் வெளியாக பெரிதும் போராடியதாகவும், பலரும் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார்.
அவர் மேடையில் அழுதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில், தான் மேடையில் அழுததிற்கான காரணம் குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது, “எனக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது, அதனால் தான் அழுதேன் என்று பலரும் நினைக்கிறார்கள். எனது 30 வருட வாழ்க்கையில் பிரச்சினை எப்போதுமே இருந்திருக்கிறது. சினிமாவில் சமீப காலமாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். 'ரெமோ' திரைப்பட தயாரிப்பாளர் ராஜா அண்ணாவின் உழைப்பைப் பார்த்து என்னை அறியாமல் வந்த கண்ணீர் தான் அது.
அந்த இடத்தில் நான் எனது உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இனிமேல் அழ மாட்டேன். என்னை மாதிரி ஒரு துறையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்களுக்குத்தான் எனது கஷ்டம் புரியும்.
அந்த இடத்தில் அழாமல் ராஜா அண்ணனை தனியாக கட்டிப்பிடித்து அழுதிருக்கலாம். இனிமேல் என் உணர்வுகளை யாரிடம் காட்ட வேண்டுமோ, அவர்களிடம் மட்டும் காட்டிக் கொள்வேன். பிரச்சினைகளுக்குள் போகாமல் சந்தோஷமாக படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
எப்போதுமே என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் ரியாக்ட் பண்ண மாட்டேன். அது தான் என்னுடைய பிரச்சினை. நான் நடிப்பு வகுப்புக்கு எல்லாம் சென்று பட்டைத் தீட்டப்பட்டு வந்தவன் கிடையாது. தினமும் படப்பிடிப்பில் கற்று வருகிறேன்.
என்னுடைய வளர்ச்சியம் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று பார்க்கிறேன். தற்போது இருக்கும் பிரச்சினைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று போகக் கூட நான் விரும்பவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் முடிவு பெறும் என நினைக்கிறேன். இனிமேல் இதே போன்றதொரு பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வேன். ” என்றார்.