Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல் கட்டுப்பாட்டு அறைக்குள் பெண்கள் பாலியல் பலாத்காரம்: சிபிசிஐடி விசாரணை

காவல் கட்டுப்பாட்டு அறைக்குள் பெண்கள் பாலியல் பலாத்காரம்: சிபிசிஐடி விசாரணை
, புதன், 24 டிசம்பர் 2014 (16:54 IST)
ஓசூர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்குள் ராஜஸ்தான் பெண்களை பிடித்துச் சென்று பாலியல் கொடுமை செய்ததாக காவலருக்கு எதிரான குற்றச்சாட்டை சிபிசிஐடி விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவர் உ.வாசுகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையத்தில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 பெண்கள் 2 சிறுமிகளுடன் காத்திருந்தனர். அப்போது, ஓசூர் காவல்நிலைய ஏட்டு வடிவேலு, அந்த பெண்களில் சிலரை புறநகர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று பணத்தை பறித்து, அவர்களை பாலியல் கொடுமையும் செய்துள்ளார். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதும், ஏட்டு வடிவேலுவை காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.
 
இந்த சம்பவம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானதும், எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தியபோது, பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், பாலியல் கொடுமை செய்த காவலர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் தெரியவந்தது.
 
தற்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் எங்கு உள்ளனர் என்றே தெரியவில்லை. எனவே, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யவும், அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாக்கப்பு ஆணையம் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட இளம் பெண் உட்பட 5 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு கடந்த 8 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், ''காவலர் வடிவேலுவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து துணை ஆட்சியர் நடத்திய விசாரணையின் அறிக்கை எங்கள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த காவலர் மீதான வேறு சில குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதில் சம்பந்தப்பட்ட காவலரை கட்டாய ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
 
மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலரை கைது செய்யவில்லை என்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து துணை ஆட்சியர் விசாரணை நடத்துவதால், வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் அவ்வாறு செய்தால், அது ஒரு குற்றச்சாட்டுக்கு இரண்டு விதமான விசாரணை நடத்துவதாகி விடும் என்று காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
 
ஆனால், தற்போது துணை ஆட்சியர் விசாரணை முடிந்து விட்டதால், இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். மேலும், காவலருக்கு எதிராக குற்றச்சாட்டு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.
 
இந்த வழக்கை துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத அதிகாரியை விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி கூடுதல் டி.ஜி.பி. நியமிக்க வேண்டும். புலன் விசாரணையின் போது, தேவைப்பட்டால் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் வடிவேலுவை விசாரணை அதிகாரி கைது செய்து, விசாரித்து அதன் அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
 
இந்த சம்பவம் குறித்து விசாரித்த துணை ஆட்சியரின் அறிக்கையை, அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த சூழ்நிலையில் எவ்வளவு இழப்பீடு வழங்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது என்பது குறித்து விபரத்தை அரசு பிளீடர் கேட்டு இந்த நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
 
இந்த வழக்கில் 2 சிறுமிகள், 2 பெண்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குள் ஏன் அழைத்து செல்லப்பட்டனர் என்ற எங்களுடைய கேள்விக்கு அரசு தரப்பில் இதுவரை சரியான பதிலை தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கை வருகிற ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்தி  வைக்கின்றோம். அன்று, இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil