Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசின் உள்ளாட்சி நிதி தமிழகத்திற்கு கிடைக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசின் உள்ளாட்சி நிதி தமிழகத்திற்கு கிடைக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
, வியாழன், 30 ஜூலை 2015 (22:47 IST)
மத்திய அரசின் பல கோடி ரூபாய் உள்ளாட்சி நிதி தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
அதிமுக அரசின் அலட்சியத்தால் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 2014-15ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதி கிடைக்காமல் போய் விட்டது. இதனால் பல கோடி ரூபாயை இழந்து நிற்கின்றன தமிழக உள்ளாட்சி அமைப்புகள்.
 
இந்த நிதியைப் பெறுவதற்கு 13-வது நிதி ஆணையம் சில நிபந்தனைகளை நிர்ணயித்தது. அவற்றுள் "அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கான கண்காணிப்பாளர் (ஆம்புட்ஸ்மேன்) நியமனம் செய்வது" "உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்து வரி விதிக்க அதிகாரம் அளிப்பது" "உள்ளாட்சி அமைப்புகளின் உள்ளூர் நிதித் தணிக்கை வருடாந்திர அறிக்கை தாக்கல் செய்வது" "மாநில அளவிலான சொத்து வரிக்குழுவை செயல்படும் நிலையில் வைத்தல்" உள்ளிட்ட மொத்தம் 9 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு நிதி ஆணையம் கூறியிருந்தது.
 
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் மத்திய அரசின் "உள்ளாட்சிகளுக்கான நிதி" கிடைக்கும். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட்டார் என்பதற்காக முன்னால் தமிழக தேர்தல் ஆணையர் சோ. அய்யரை அவசர அவசரமாக "ஆம்புட்ஸ்மேன்" சட்ட விதிகளை திருத்தி நியமனம் செய்வதில் காட்டிய வேகத்தை துளி கூட மற்ற நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு காட்டவில்லை. அந்த ஆம்புட்ஸ்மேன் நியமனத்தைக் கூட அரசியல் மயமாக்கியது. நிதி ஆணையம் நிர்ணயித்த 9 நிபந்தனைகளில் 7 நிபந்தனைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
 
இந்நிலையில், நிபந்தனைகளை நிறேவற்றாததால் மத்திய அரசின் பல கோடி ரூபாய் உள்ளாட்சி நிதி தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. ஆனால் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் நாட்டிலேயே அதிக நிதியை அம்மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடம் பெற்றுள்ளன என்று வெளிவந்துள்ள செய்திகள் தமிழக அரசை வெட்கி தலை குணிய வைத்திருக்க வேண்டும்.
 
 "மத்திய அரசு நிதியை செலவழிக்காமல் திருப்பி அனுப்புவது" அல்லது "மத்திய அரசு கொடுக்கும் நிதியை வாங்காமல் இருப்பது" போன்றவை மட்டும்தான் அதிமுக அரசின் செயல்பாடாக இருக்கிறது. ஏற்கனவே மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லாம் நிதியின்றி தடுமாறிக் கொண்டிருக்கின்றன. கடும் நிதிப் பற்றாக்குறையில் இருப்பதால், வளர்ச்சித் திட்டங்களும், உள்கட்டமைப்புத் திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு வழங்கும் நிதியைப் பெறுவதற்கான தகுதியை இழந்து நிற்கிறது அதிமுக அரசு.
 
செயலற்ற அரசு என்பதற்கு அத்தாட்சியாக விளங்கும் அதிமுக அரசு 13ஆவது நிதி ஆணையத்தின் 9 நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியது ஏன்? அதன் மூலம் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் உள்ளாட்சி நிதியைப் பெற தவறியது ஏன் என்பது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
 
அத்துடன், இழந்து விட்ட உள்ளாட்சி நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil