Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைக்க - சீமான்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (14:14 IST)
தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைக்க சீமான் வலியுறுத்தல்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடலின்றி கட்டப்பட்டுள்ளதால் கோர அலைகளில் சிக்குண்டு தொடர்ச்சியாக மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பது மிகுந்த வேதனைக்குரியது.

2019 ஆம் ஆண்டுத் திறந்து வைக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆனி-ஆடி மாதங்களில் இத்துறைமுகத்தின் முகதுவாரத்தில் எழும் பேரலைகளில் சிக்குண்டு தொடர்ச்சியாக மீனவச்சொந்தங்கள் உயிரிழந்து வருவது தொடர் நிகழ்வாகிவிட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 5 மீனவர்கள் உயிரிழந்த நிலையில், இது வரைக்கும் 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் மீண்டும் இன்று (11.08.2022) தம்பி சைமன் என்ற பூத்துறை ஊரை சேர்ந்த மீனவர் தேங்காய்ப்பட்டணம் துறைமுக நுழைவாயிலில் எழுந்த கோர அலையில் சிக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஈடுசெய்யவியலாப் பேரிழப்பினால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மீனவச் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கடந்த அதிமுக ஆட்சியின் போதே, இதுபோன்ற தொடர் விபத்துகள் நடைபெறுவதைத் தடுத்திட இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரங்களை உரிய வல்லுநர் குழு அமைத்து விரைந்து மறுசீரமைக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாகப் போராடியதற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு அப்போதைய அதிமுக அரசு துறைமுகத்தைச் சீரமைக்க 77 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் எவ்வித பணிகளும் தொடங்கப்படவில்லை. அதன் பின்பு ஐயா ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்து ஓராண்டு கடந்த பிறகும் இதுவரை துறைமுகத்தைச் சீரமைக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆட்சியாளர்களின் இத்தகைய அலட்சியப்போக்கினால் தொடர்கின்ற இது போன்ற விபத்துகளில் உயிரிழப்புகள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான விசைப்படகுகளும் சிக்குண்டு மிக மோசமான நிலையில் பழுதடைவதும், வலை உள்ளிட்ட அனைத்து மீன்பிடி உபகரணங்களையும் மீனவர்கள் இழப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அன்றைய அதிமுக அரசு கையாண்ட அதே அலட்சியப்போக்கையே இன்றைய திமுக அரசும் தொடர்வது வெட்கக்கேடு! இப்படி மக்களை மடியவைத்து ரசிப்பதுதான் விடியல் ஆட்சியா?

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு கடந்தும் இரையுமன் துறைமுகத்தைச் சீரமைக்கவும், தொடர் விபத்துகளைத் தடுக்கவும், எந்தச் செயல்திட்டத்தையும் முன்னெடுக்காது மக்கள் உயிரைக் காக்க தவறிய தி.மு.க அரசு, இனியாவது தனது அலட்சியப்போக்கினைக் கைவிட்டு, தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீர்செய்து மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும் எனவும், அரசின் அலட்சியத்தால் உயரிழந்த மீனவர் சைமன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயைத்‌ துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments