Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்வண்டி கட்டண உயர்வு திட்டமிட்ட சதி! செந்தமிழன் சீமான் அறிக்கை

தொடர்வண்டி கட்டண உயர்வு திட்டமிட்ட சதி! செந்தமிழன் சீமான் அறிக்கை
, திங்கள், 15 டிசம்பர் 2014 (20:38 IST)
தொடர் வண்டி கட்டண உயர்வுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
 
இதில் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: 
 
எரிபொருள் கட்டணம் உயர்ந்து வருவதால் தொடர் வண்டி கட்டணமும் உயர வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருப்பது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏழை எளிய மக்கள் பயணிக்க ஒரே ஆதாரமாக தொடர்வண்டி மட்டுமே இருக்கும் நிலையில், அதற்கான கட்டண உயர்வை அறிவித்தால் மக்கள் எத்தகைய சிரமத்துக்கு ஆளாகுவார்கள் என்பதை மத்திய அரசு எண்ணிப்பார்க்க வேண்டும்.
 
கடந்த ஜூலை மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது தொடர் வண்டித் துறையை மேம்படுத்தப் போவதாகச் சொல்லிக் கடுமையான கட்டண உயர்வை அறிவித்தது மத்திய அரசு. அந்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் மீளாத நிலையில் அரசுக்கு ஏற்படும் நெருக்கடியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனச் சொல்லி மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சர் மீண்டும் கட்டண உயர்வை தவிர்க்க முடியாததாகச் சொல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
 
ஏற்கெனவே தொடர் வண்டித் துறையில் சொகுசு வசதிகளை மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி நூறு சதவீத அந்நிய முதலீட்டுக்கு வழிசெய்ய முயலும் மத்திய அரசு கட்டண உயர்வைத் திட்டமிட்டே அறிவிக்கிறது. மக்களைத் தொடர் நெருக்கடிக்குத் தள்ளுவதன் மூலமாகத் தொடர் வண்டித் துறையையே தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டமிடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 
எனவே கட்டண உயர்வுக்குத் திட்டமிடும் மத்திய அரசு மக்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு அந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் மிகக் கடுமையான போராட்டங்களை மத்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி நடத்தும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்து உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil