Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி வேன் கால்வாயில் பாய்ந்து விபத்து: 3 பேர் பலி, 8 குழந்தைகள் படுகாயம்

பள்ளி வேன் கால்வாயில் பாய்ந்து விபத்து: 3 பேர் பலி, 8 குழந்தைகள் படுகாயம்
, செவ்வாய், 31 மார்ச் 2015 (07:34 IST)
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பள்ளி வேன் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் எஸ்.ஜி.எஸ். நினைவு மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியை சேர்ந்த 9 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள், தினமும் பள்ளி வேனில் சென்று வருவது வழக்கம்.
 
நேற்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் பள்ளி வேன், வேங்கோடு பகுதியில் உள்ள 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கருங்கல் நோக்கி புறப்பட்டது. வேனை கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ் என்பவர் ஓட்டிச்சென்றார். அவருக்கு வயது 30.
 
அந்த வேன் வேங்கோடு பகுதியில் உள்ள ஒரு ஆலயம் அருகே சென்ற போது, பிரேக் பழுதடைந்து தாறுமாறாக ஓடியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று சாலையோரம் இருந்த ஒரு டீக்கடை சுவர் மீது மோதியது. இதனால அந்த சுவர் இடிந்தது, பின்னர் கடையின் பின்னால் உள்ள கால்வாய்க்குள் அந்த வேன் பாய்ந்தது.
 
அப்போது, அந்த கால்வாயில் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கனகலதா குளித்து கொண்டிருந்தார். அவர் மீது அந்த வேன் பாய்ந்தது, இதனால் வேனுக்கு அடியில் சிக்கிய கனகலதா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேன் ஓட்டுநர் ஜெனிசும் இடிபாடுகளில் சிக்கி பலியானார்.
 
இந்நிலையில் வேனில் இருந்த பள்ளி குழந்தைகளும், ஆயாவும் கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் ஓடிவந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், புதுக்கடை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்துவந்த புதுக்கடை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
 
இந்த விபத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் சஜின்குமார் (8), அனிதா (8), ஜோஸ்லின் (4), அஸ்வின் கிறிஸ்டி (9), பெனர்லின் (5), பியுலின் டெனி (9), ஜோஸ்லின் டால் (5), சாம்லின் அஸ்வினி, வேனில் இருந்த ஆயா நேசம் ஆகியோரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கக் கொண்டு செல்லும் வழியில் மாணவன் சஜின்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.
 
இந்நிலையில், படுகாயம் அடைந்த ஆயா மற்றும் பள்ளி குழந்தைகள் 8 பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் அலறியடித்துக்கொண்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

இந்த விபத்து குறித்து புதுக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil