தங்கள் பக்கம் நிற்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை அளிக்க சசிகலா தரப்பு முன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது சசிகலாவா? அல்லது ஓ.பன்னீர் செல்வமா? என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாக சசிகலா தரப்பு கூறி வந்தது. ஆனால், அதிலிருந்து 5 பேர் ஏற்கனவே ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர். சட்டமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூப்பேன் எனவும் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு, பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசாட்டிலும் ஏராளமான எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எம்.எல்.ஏக்கள் தங்கள் வீட்டிற்கு பேசக் கூட அனுமதி கிடையாதாம். முக்கியமான செல்போன் அழைப்பை கூட, ஸ்பீக்கரில் ஆன் செய்து விட்டே பேச வேண்டும் எனவும், மற்ற நேரங்களில் செல்போனை அணைத்து வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டப்பட்டுள்ளதாம். இவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சி அமைக்க ஆளுனர் உத்தரவு அளிக்கும் வரை, அதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும், அதிமுக எம்.எல்.ஏக்களை கட்டுக்குள் வைக்கவும், பாதுகாக்கவும் மன்னார் குடியிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக, தங்களுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏக்களுக்கு கோடிகளை கொட்டிக் கொடுப்பதாக சசிகலா தரப்பு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக சில கோடிகளும், ஆட்சி அமைத்த பின் சில கோடிகளும் கொடுக்கிறோம் என மன்னார் குடி தரப்பு வாக்குறுதி அளித்துள்ளதாம்...
பொதுவாக, அரசியலில், ஒரு கட்சி ஆட்சி அமைப்பதற்காக, கோடிக்கணக்கான பணத்தை இறைப்பது என்பது, காலம் காலமாக இந்திய அரசியலில் நடக்கும் நிகழ்வுதான். ஆனால், மக்கள் ஆவேசம் அடைந்திருக்கும் இந்த வேளையிலும், மன்னார்குடி தரப்பு எந்த பதற்றமும் இல்லாமல், இப்படி ஆட்டம் போடுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.