Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரையில் மட்டும் விசாரணை நடத்தினால் போதும்: சகாயத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் மட்டும் விசாரணை நடத்தினால் போதும்: சகாயத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
, செவ்வாய், 25 நவம்பர் 2014 (15:43 IST)
கனிமவள முறைகேடு குறித்து தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரணை நடத்தினால் போதும்; படிப்படியாக விசாரணையை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கனிமவள முறைகேடு குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா? அல்லது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் விசாரணை நடத்த வேண்டுமா? என்று தெளிவுபடுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "கனிமவள முறைகேடு குறித்து தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரித்தால் போதும். விவகாரம் மிகப்பெரியது என்பதால் படிப்படியாக அடுத்தகட்ட விசாரணையை விரிவுபடுத்திக் கொள்ளலாம்" என தெரிவித்தனர்.
 
தமிழகத்தில் சட்ட விரோதமாக பல கனிமவள குவாரிகள் செயல்படுகின்றன. பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனிமவள குவாரிகளில் மட்டும் ஆய்வு மேற்கொண்டது.
 
இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் நடப்பதாகக் கூறப்படும் கனிமவள முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
 
இதுபோல, பசுமை தாயகம் செயலாளர் அருள் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளின் முறைகேடுகளை மட்டும் விசாரிப்பதற்காக சகாயம் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசின் தொழில் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் பணித்துறை உதவியுடன் தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஆற்று மணல், செம்மண், கல் குவாரிகள், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட அனைத்து வகையான கனிம வள குவாரிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சகாயம் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
 
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், கனிமவள முறைகேடு குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா? அல்லது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் விசாரணை நடத்த வேண்டுமா? என்று தெளிவுபடுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், குழுவில் தான் விரும்பும் அதிகாரிகளை விசாரணை குழுவில் இடம்பெற அனுமதி வழங்கக் கோரியும் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கனிமவள முறைகேடு குறித்து தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரித்தால் போதும் படிப்படியாக விசாரணையை விரிவுபடுத்திக் கொள்ளலாம் எனவும், சகாயம் விரும்பும் அனைத்து அதிகாரிகளையும் குழுவில் இடம்பெறச் செய்ய முடியாது. எந்தெந்த அதிகாரிகளுக்கு விசாரணைக் குழுவில் பங்கேற்க முடியுமோ அவர்கள் மட்டுமே பங்கேற்க வழிவகை செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil