Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ. 570 கோடி விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - சிபிஐக்கு நோட்டீஸ்

ரூ. 570 கோடி விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - சிபிஐக்கு நோட்டீஸ்
, வியாழன், 9 ஜூன் 2016 (13:31 IST)
3 கண்டெய்னரில் சிக்கிய ரூ. 570 கோடி விவகாரம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
கடந்த மே மாதம் 13ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் அவினாசி அருகே பெருமாநல்லூரில் - குன்னத்தூர் சாலையில் 3 கண்டெய்னர் லாரிகள் வரிசையாக வந்தன.

தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தியபோது, 3 கண்டெய்னர் லாரிகளில் வந்த 15 பேர் தங்களை ஆந்திர மாநில காவல் துறையினர் என்றும், கோவையில் உள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளைக்கு பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததாக குற்றம் சாட்டப்பட்டது.
 
பின்னர், அவர்கள், வங்கியில் இருந்து கொண்டு வந்த பணம் என்று கூறினாலும் நகல் ஆவணங்கள் மட்டுமே இருந்ததால் 3 கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி இருந்தனர்.
 
பிறகு, கண்டெய்னரில் உள்ள ரூ. 570 கோடி ரூபாய் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்று அவ்வங்கி உரிமை கொண்டாடியது. மேலும், பணத்தை ரிசர்வ் வங்கி அனுமதியுடன் தான் கோவையிலிருந்து கொண்டு வருவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
பின்னர், பணம் கோவை ஸ்டேட் வங்கி கிளையிலிருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள வங்கிக் கிளைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், இந்தப் பணம் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய அரசியல் கட்சி ஒன்றுக்குச் சொந்தமானது என சில கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன. இது குறித்து புலனாய்வுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
 
பின்னர், இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும் சிபிஐயும் விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி திமுக சார்பில் பிரதமர், சிபிஐ இயக்குனர், உள்துறை அமைச்சர், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், தாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் கோரி திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு இன்று நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திமுக புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கு இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் காவலரை ஆபாசமாக படம் பிடித்த சக காவலர்: பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி