Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனமழைக்கு பலியான 5 குடும்பங்களுக்கு தலா 4 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

கனமழைக்கு பலியான 5 குடும்பங்களுக்கு தலா 4 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு
, சனி, 5 டிசம்பர் 2015 (14:55 IST)
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையினால்  பலியான 5 பேர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


 
 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்த கன மழையினால் திருவண்ணாமலை மாவட்டம், மோசவாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி ரத்தினம்மாள்; திருநெல்வேலி மாவட்டம், மாயமான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் அமிர்தலிங்கம் என்கிற லிங்கராஜா; திருவாரூர் மாவட்டம், மகாதேவபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் உமா மகேஸ்வரி; ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.
 
சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த வேலப்பன் என்பவரின் மகன் ராஜகோபால் கன மழையின் காரணமாக வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
 
திருநெல்வேலி மாவட்டம், வடக்கு பனவடலி கிராமத்தைச் சேர்ந்த சின்னமுத்தையா என்பவரின் மகன் வேலுச்சாமி மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
 
தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 5 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil