Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்: ஜெயலலிதா வேண்டுகோள்

அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்: ஜெயலலிதா வேண்டுகோள்
, சனி, 9 ஜனவரி 2016 (15:35 IST)
உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு சாலைப் பாதுகாப்பு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் சாலைப் பாதுகாப்பு வார விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த ஆண்டு "சாலைப் பாதுகாப்பு – செயல்பாட்டிற்கான தருணம்" என்ற கருப்பொருளை மையப்படுத்தி 27 ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா 10.1.2016 முதல் 16.1.2016 வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது.
 
விபத்தில்லா சாலைப் பயணம் அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு சாலைப் பாதுகாப்பு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
 
தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வண்ணம் 2015–16 ஆம் நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
சாலைப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் வானொலி பண்பலை சேவைகளின் மூலம் நாள்தோறும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
 
சாலை பாதுகாப்புக் குறித்து கைப்பேசி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 
சாலை விபத்துக்களின் போது விலை மதிப்பில்லாத மனித உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ, இடைவெளியில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
 
இதே போன்று நெடுஞ்சாலைகளில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறியவும், சாலை விபத்துகளில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தவும் 24 மணிநேரமும் நெடுஞ்சாலை ரோந்துப் பணி காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
 
சாலை விபத்துகளில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பொருட்டு மீட்பு வாகனம், வேகம் கண்டறியும் கருவிகள், மூச்சுப் பகுப்பாய்வு கருவி, திசை காட்டும் பலகைகள், வேகத்தடுப்பான்கள் போன்ற சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
 
தமிழ்நாடு அரசு பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும்.
 
ஆகவே, இது செயல்பாட்டிற்கான தருணம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து சாலை விதிகளை பின்பற்றி பயணம் விபத்தில்லாததாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil