Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படித்து தெரிந்து கொள்ளுங்கள் - ரங்கராஜ் பாண்டேவின் கருத்து (சு)தந்திரம்

படித்து தெரிந்து கொள்ளுங்கள் - ரங்கராஜ் பாண்டேவின் கருத்து (சு)தந்திரம்

படித்து தெரிந்து கொள்ளுங்கள் - ரங்கராஜ் பாண்டேவின் கருத்து (சு)தந்திரம்
, ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (14:54 IST)
ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி சிந்தனை அரங்கில் கருத்து (சு)தந்திரம் என்னும் தலைப்பில் தந்தி தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே பேசினார்.


 
அவர் பேசியதாவது, “கருத்து சுதந்திரமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது நியாயத்தோடும், நடுநிலைமையோடும், அடுத்தவர் மனம் புண்படாதபடியும் இருக்க வேண்டும். உள்நோக்கத்தோடு பேசப்பட்டால் அது கருத்துச் சுதந்திரம் அல்ல, அது கருத்து தந்திரம். ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் இருக்கும் உண்மைத் தன்மைக்கு யார் உத்தரவாதம் தருவது? ஊடகங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டு இருக்கக் கூடாது. பல துறைகளைப் பார்த்து கேள்வி கேட்போம். ஆனால், நாங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் என செய்தியாளர்கள் கருதினால் அது கருத்து சுதந்திரம் அல்ல, கருத்துத் தந்திரமாகத்தான் கருதப்பட வேண்டும்.

புத்தகங்களுக்குத் தடை இருக்கக் கூடாது. ஆனால், அது ஆய்வுக் கட்டுரையா அல்லது புனைக் கட்டுரையா என்ற தெளிவு இருக்க வேண்டும். படைப்பாளிகளும், பத்திரிகையாளர்களும் தாங்கள் வெளியிடும் செய்திக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். சாமானியர்களின் ஊடகமாக இருக்க வேண்டிய சமூகவலைதளங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலை உள்ளது. மனித மனதுக்குள் எவ்வளவு வன்மம் இருக்கிறது, ஜாதியும், மதமும் எவ்வளவு ஆழமாக ஊடுருவி இருக்கின்றன என்பதை சமூக வலைதளங்கள் வெளிப்படுத்துகின்றன.தனிப்பட்ட தாக்குதல்கள் சமூகவலைதளங்களில் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

எந்தக் கருத்தையும் உறுதி செய்யாமல் அப்படியே மற்றவர்களுக்கு அனுப்புவது தவறு. இதனால், ஜாதி, மத கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொடா, தடாவை விட கொடுமையான சட்டங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன. சமூக சிக்கல்களுக்கு காரணமாக அவை அமைகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் ஆபத்தான வடிவமாக சமூக வலைதளங்கள் விளங்குகின்றன. அரசியல் கட்சிகள் தங்கள் தந்திரத்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.

சமுதாயத்தை வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கின்றனர். அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தந்திரமும், சுதந்திரமும் புரிந்துகொள்ளப்படாவிட்டால் ஏமாந்து போவோம். கருத்து சுதந்திரம்தான் தேவை. கருத்து தந்திரம் தேவையில்லை." என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’நா. முத்துக்குமார் மீது கோபம்’ - கமல் ஹாஸன்