Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 1 கோடி தடுப்பூசி வழங்கவேண்டும்… ராமதாஸ் கோரிக்கை!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (12:41 IST)
இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது சம்மந்தமாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :-

“தமிழ்நாட்டில் போதிய அளவு தடுப்பூசிகள் இல்லாததால் இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படவிருந்த நிலையில், புதிதாக 4.95 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைத்திருப்பதால் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், 18-44 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்காக தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறது. இந்தியா முழுவதும் நேற்று வரை 21.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 93.41 லட்சம் மட்டும் தான். இது ஒட்டுமொத்த இந்தியாவில் போடப் பட்ட தடுப்பூசிகளில் 4.31% மட்டும் தான். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத எண்ணிக்கை ஆகும். தமிழகத்திற்கு போதிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்படாதது தான் இதற்கு காரணம்.

கரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவலைத் தடுக்க வேண்டும் என்றால் வரும் திசம்பர் மாதத்திற்குள் பெரும்பான்மையினருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டியது அவசியமாகும். அந்த இலக்கை அடைய வேண்டுமானால், இனி வரும் நாட்களிலாவது தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்; அவை வீணடிக்கப்படாமல் அனைத்து வயதுப் பிரிவினருக்கும் செலுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்திற்கான ஜூன் மாத தடுப்பூசி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது. ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து 25.50 லட்சம் தடுப்பூசிகள், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக 16.75 லட்சம் தடுப்பூசிகள் என மொத்தம் 42.25 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஜூன் மாதத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிகக் குறைவு.

மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் உள்ளிட்ட பிற ஆதாரங்களில் இருந்து 2 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. அவற்றில் 6.09 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசின் மூலம் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 5.86 கோடி தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி நிறுவனங்களால் நேரடியாக விற்பனை செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இவற்றில் தமிழகத்திற்கு ஒரு கோடிக்கும் கூடுதலான தடுப்பூசிகளை வழங்குவது மட்டுமே நியாயமான ஒதுக்கீடாக இருக்கும்.

2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பு ரூ.140 லட்சம் கோடி ஆகும். அதில் தமிழகத்தின் பங்கு ரூ. 20 லட்சம் கோடி ஆகும். அதாவது இந்தியாவின் பொருளாதாரத்தில் 14.28% தமிழகத்தைச் சேர்ந்ததாகும். இதையே அளவுகோலாக கொண்டு பார்த்தால் தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் ஒரு கோடியே 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாக 42.25 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுவது நியாயமற்ற செயலாகும். தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதில் சில அளவீடுகளை பின்பற்றுவதாகவும், அதன்படி தான் தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறுகிறது. அதன்படி பார்த்தால் கூட இந்தியாவிலேயே தினசரி கரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ள மாநிலம், மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்திய மாநிலம் என்ற அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த அடிப்படையிலும் இல்லாமல் தமிழகத்திற்கான தடுப்பூசிகளைக் குறைத்து, பிற மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை வழங்குவதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் இது வரை இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 72.79 லட்சம் ஆகும். இது தமிழக மக்கள்தொகையில் 10 விழுக்காட்டுக்கும் குறைவாகும். பிற மாநிலங்களில் கூடுதலாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் தடுப்பூசித் தேவையை கருத்தில் கொண்டு ஜூன் மாதத்தில் மத்திய அரசு நேரடி ஒதுக்கீட்டின் மூலமாகவும், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை மூலமாகவும் தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments