Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யக் கூடாது - ராமதாஸ்

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யக் கூடாது - ராமதாஸ்
, ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2014 (14:54 IST)
பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன்,  மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- 
 
தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம்  கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.
 
அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே. ஆனால், வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையோ 33.57% ஆகும். அதேபோல்,தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில்  26.37% ஆங்கிலப்பட்டம் பெற்றவர்கள் ஆவர். அறிவியல் பாடங்களுக்கும், ஆங்கிலப்பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தாய்மொழியாம் தமிழ் பொழிக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
 
தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களில் மூன்றில் இரு பங்கினர் பதவி உயர்வின் மூலமாகவும், ஒரு பங்கினர் மட்டும் நேரடியாகவும் நியமிக்கப்படுவதாக தமிழகஅரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், சுமார் 1550 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி தமிழாசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக தெரிய வில்லை. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர்.
 
இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது. அதுமட்டுமின்றி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடைமுறையும் உள்ளது. இதன்மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யும் இப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.
 
மேலும் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil