Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஏன்? - ராமதாஸ்

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஏன்? - ராமதாஸ்
, வெள்ளி, 19 டிசம்பர் 2014 (12:22 IST)
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்துள்ள உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; இதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தில் இதேபோன்ற கோரிக்கை ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்டபோது அதை உச்சநீதிமன்றம் நிராகரித்த வரலாறு உள்ளது. டான்சி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் 2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட இயலவில்லை. ஆனாலும், சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாமலேயே முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, தாம் முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமானால் 2001 நவம்பர் 13 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும்; அதற்கு வசதியாக டான்சி வழக்கில் தமது மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிட வேண்டும் என்று அந்த ஆண்டு செப்டம்பர் 7, 14 ஆகிய தேதிகளில் இரு முறை மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அப்படியெல்லாம் ஆணையிட முடியாது என நீதிபதி எஸ்.பி.பரூச்சா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு  கூறிவிட்டது.
 
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உதவ வேண்டும் என்று கடந்த ஜூன் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, ‘‘சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள்  முன்வைக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்காக அவர்கள் மீதான வழக்குகளை விரைவாக நடத்தினால், அதன்காரணமாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகள் பாதிக்கப்படும். குறிப்பிட்ட சிலரின் வழக்குகளை விரைவாக நடத்துவதை விட அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரிப்பதற்கான நடைமுறையை உருவாக்குவது தான் சிறந்தது’’ என்று தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்? என்பது தான் மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய வினாவாகும். ஊழல் வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கம் கூட இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த நல்ல நோக்கத்தைக் காட்டுவதற்குக் கூட இவ்வழக்கு தகுதியற்றது என்பது தான் மக்களின் கருத்தாகும். அதிகபட்சமாக ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டிய சொத்துக் குவிப்பு வழக்கை 17 ஆண்டுகளுக்கு இழுத்தடித்தவர் ஜெயலலிதா. இல்லாத காரணங்களைக் கூறி வழக்கு விசாரணையின்போது 185 முறை வாய்தா வாங்கியவர் ஜெயலலிதா. விசாரணை நீதிமன்ற நீதிபதி தொடங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரையும் தமது வாய்தா அணுகுமுறையால் வெறுப்பேறியவர் ஜெயலலிதா. இப்படிப்பட்ட ஜெயலலிதா அவரது சொந்த நலனுக்காக மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கோரும்போது, உச்சநீதிமன்றத்திற்கு அதை ஏற்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் என்னைப் போன்றவர்களின் மனதில் எழும் வினா.
 
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் 6  ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கமே, அரசியல்வாதிகள் பதவியில் இல்லாமல் இருந்தால் தாங்கள் செய்த தவறுகளுக்காக வருந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது தான். சிறையில் அடைக்கப்படுவதை விட, தமிழ்நாட்டை ஆளுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் தம்மிடம் இருக்கும் போதிலும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால், ஆட்சி செய்யும் வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் முடங்கிக் கிடப்பது தான் ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள பெரிய தண்டனை ஆகும்.
 
தேர்தலில் வென்றும் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம் இந்த தண்டனையை தான் இப்போது ஜெயலலிதா அனுபவித்து வருகிறார். பல்வேறு வகையான குற்றங்களைச் செய்தவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததைக் காரணம் காட்டி விடுவிக்கப்பட்டாலும் கூட, அவர்கள் வழக்கு விசாரணைக்காக அலைந்தது, விசாரணைக் காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவையே அவர்களுக்கு தார்மீக தண்டனையாக அமைந்து விடும். ஆனால், இந்திய நீதி வழங்கும் அமைப்பையே கேலிக்கூத்தாக்கிய ஜெயலலிதா இந்த தார்மீக தண்டனையை கூட அனுபவிக்காமல் தவிர்க்க வேண்டுமா?
 
உச்சநீதிமன்றத்தில் 64,919 வழக்குகள் உட்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 3.15 கோடி வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன. காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்குகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்வு ஏற்படவில்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் மனு மீதான விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை. செய்யாத குற்றத்திற்காக 24 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரும் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்யப்படாதது குறித்த வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை. எந்தத் தவறும் செய்யாத லட்சக்கணக்கானோர் விசாரணைக் கைதிகளாகவே தண்டனைக் காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடும் சோக வரலாறு நம்முன் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை மட்டும் விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? என்பது தான் தெரியவில்லை.
 
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அதை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஆணையிடாத நீதிமன்றம் இப்போது மட்டும் அவசரம் காட்டுவது ஏன்? என்ற வினா மக்களிடையே எழுந்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதைப் போல, அவசரம் காட்டப்படும் நீதி, புதைக்கப்பட்ட நீதி என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்; அடுத்த ஒரு மாதத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இவ்வழக்கை விசாரிக்கவிருக்கும் நீதிபதிகள் மீது ஒருவிதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் ஜெயலலிதாவின் பிணை மனுவை முடித்து வைக்காமல் இன்னும் ஆய்விலேயே வைத்திருப்பதும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
ஹரியானாவில் ஆசிரியர் நியமன ஊழலில் தண்டிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 123 நாட்களுக்கு பிறகு தான் பிணை வழங்கப்பட்டது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் 75 நாட்களுக்கு பிறகே பிணையில் விடுதலையாக முடிந்தது. இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, பிணை விதிகளை மீறியதாகக் கூறி ஓம்பிரகாஷ் சவுதாலா மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால்,  நீதித்துறையை அடுத்தடுத்து அவமதித்த ஜெயலலிதாவுக்கு நிபந்தனைகளே இல்லாமல் இடைக்கால பிணை வழங்கப்படுகிறது; அவர் கோரியவாறு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ‘‘ சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா?’’ என்ற வினா சாமானியர் மனதில் மீண்டும் மீண்டும் எழுவதை தவிர்க்க முடியவில்லை'' எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil