Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளியில் மாணவிகள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்த சம்பவம்: பெற்றோர்களுக்கு அக்கறை தேவை - ராமதாஸ்

பள்ளியில் மாணவிகள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்த சம்பவம்: பெற்றோர்களுக்கு அக்கறை தேவை - ராமதாஸ்
, புதன், 8 ஜூலை 2015 (16:58 IST)
கோவை தனியார் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் சில மாணவிகள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்துள்ள சம்பவம், பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் மீது அக்கறை தேவை என்பதையே காட்டுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கோவை இடையர்பாளையம் அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் பாடவேளையின் போது 7 மாணவிகள் செல்பேசியில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்தியைக் கேட்டதும் எங்கே போகிறது தமிழ்நாடு? என்ற கவலை கலந்த அதிர்ச்சியும், வேதனையும் தான் என்னை வாட்டுகிறது.
 
பள்ளிக்கூடம் என்பது கோயில். அங்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் தான் தெய்வம் என்பது தான் நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்த கலாச்சாரம். அதனால் தான் இன்றளவும் பள்ளிக்கூடங்கள் கல்விக்கோயில்கள் என்றழைக்கப்படுகின்றன. அவ்வளவு புனிதமான பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மது அருந்துவதாகவும், மாணவிகள் ஆபாசப் படம் பார்ப்பதாகவும் வெளியாகும் செய்திகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் விதிவிலக்குகள். எங்கோ ஓரிடத்தில் எப்போதோ நடக்கும் நிகழ்வுகள் என்று நமக்கு நாமே ஆறுதல் கூறிக் கொண்டு அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.
 
கல்வி எப்போது வணிகமயமானதோ, அப்போதே சீரழிவுகளும் தொடங்கிவிட்டன. கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவு பெற்றோர்-குழந்தை உறவுக்கு இணையாக இருந்தது. அப்போது படிப்பைவிட ஒழுக்கத்திற்கும், நல்வழக்கத்திற்கும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மாணவர்கள் நலனில் அக்கறை காட்டி அறிவுரை கூறும் ஆசிரியர்கள் அப்போது இருந்தனர். மாணவர்களை கண்டிப்பதற்கான உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கல்வி வணிகமயமான பின்னர் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவு விற்பவர்-வாங்குபவர் உறவாக மாறிவிட்டது. இதனால் அறநெறிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாடம் கற்பிப்பது மட்டுமே ஆசிரியரின் பணி. அதற்கு மேல் மாணவர்கள் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றாகி விட்டது. இன்னும் சில இடங்களில் மாணவர்களைக் கண்டிக்கும் ஆசிரியர்கள் தாக்கப்படுவதால் அவர்கள் படிப்பை தாண்டி மற்ற விஷயங்களை கண்டுகொள்வதில்லை.
 
இதனால், கிடைத்த கட்டற்ற சுதந்திரம் பல நேரங்களில் மாணவர்கள் எல்லை தாண்டுவதற்கு காரணமாக இருக்கிறது. கட்டற்ற சுதந்திரத்துடன், நல்லது கெட்டது பார்க்காமல் ஒட்டுமொத்த உலகையும் விரல் நுனிக்கு கொண்டு வரும் நவீன செல்பேசிகளும் சேர்ந்ததன் விளைவு தான் கோயம்புத்தூர் பள்ளியில் மாணவிகள் ஆபாச படம் பார்த்த நிகழ்வு. இதைக் கண்டித்த ஆசிரியையை மாணவிகள் மிரட்டியதும், தங்களது செயலுக்காக வருந்தாததும் கல்விச் சூழல் சீரழிந்து வருவதற்கான அறிகுறிகள். இத்தனைக்கும் அந்த மாணவிகள் உயர்வகுப்பு படிப்பவர்கள் கூட இல்லை... ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள்தான். பதின்வயது தொடங்கும் காலத்திலேயே உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நெருங்கிவரும் சீரழிவுகளுக்கு இடம் கொடுத்துவிட்டால் எதிர்காலம் நரகமாகிவிடும் என்பதை நாளைய தலைமுறைகளான மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்; விழித்து ஒதுங்கி கொள்ள வேண்டும்.
 
தகவல் தொடர்புக்கு உதவியாக இருக்கும் செல்பேசிகள்தான் சீரழிவுக்கும் காரணமாக உள்ளன என்பதால், பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செல்பேசிகளை வாங்கித் தரக்கூடாது. உறவினர்கள் எவர் மூலமாவது செல்பேசி கிடைக்கிறதா? என்பதையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அதேபோல் பள்ளிகளில் மாணவர்கள் செல்பேசி பயன்படுத்தக் கூடாது என்ற சுற்றறிக்கையை உறுதியாக கடைபிடிக்கும்படி பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையிட வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களிடம் செல்பேசிகள் உள்ளனவா? என்பதை பள்ளி நிர்வாகங்கள் தினமும் நாகரீகமான முறையில் சோதனையிட வேண்டும். செல்பேசிகளால் ஏற்படும் சீரழிவுகளைத் தடுக்க கல்வித்துறை, பள்ளிகள், பெற்றோர் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும்.
 
இளைய சமுதாயம் திசை மாறிச் செல்லாமல் தடுப்பதில் ஆசிரியர்களைவிட பெற்றோர்களுக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது. மாணவர்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதற்காக ஆசிரியர்களை குறை சொல்வதில் பயனில்லை. குழந்தைகள் நலனில் பெற்றோர்தான் அக்கறை செலுத்த வேண்டும். தங்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுதல், நன்னெறிகளை போதித்தல், சமூகத் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை பெற்றோரின் அன்றாடக் கடமைகளாக இருக்க வேண்டும். பள்ளிகளும் நீதிபோதனை வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும். அத்துடன், மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக பார்க்காமல் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களுடன் நன்னெறிக் கதைகளை துணைப்பாடங்களாக வைத்து அவற்றுக்கு விருப்பத் தேர்வுகளையும் நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil