Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயபாஸ்கருக்கு ரூ.40 கோடி ; கமிஷனுருக்கு ரூ.60 லட்சம் : குட்கா ஆலை நிறுவனம் லஞ்சம்?

விஜயபாஸ்கருக்கு ரூ.40 கோடி ; கமிஷனுருக்கு ரூ.60 லட்சம் : குட்கா ஆலை நிறுவனம் லஞ்சம்?
, செவ்வாய், 27 ஜூன் 2017 (16:42 IST)
தமிழகத்தில் தடையின்றி குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு பல கோடிகள் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக நீருபிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
"தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளைத் தடையின்றி விற்பனை செய்வதற்காகச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்த உண்மை குறித்து, தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலை மூடி மறைக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. 
 
கடந்தாண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வந்த எம்.டி.எம் குட்கா ஆலைகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், போதைப்பாக்கு விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்ததுக்கான ஆதாரங்கள் சிக்கின. அவற்றின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருக்கு வருமானவரித் துறை முதன்மை ஆணையர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி எழுதியிருந்தார். அதன்பின்னர் ஓராண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், அதன்மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
 
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை உயரதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு மாதாமாதம் கையூட்டு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. எம்.டி.எம் குட்கா ஆலையின் ஒரே ஒரு பங்குதாரரிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குப் பல கோடிகள், சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு ரூ.60 லட்சம் உட்பட மொத்தம் ரூ.40 கோடி கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதை வருமான வரித்துறை விசாரணையின்போது குட்கா ஆலையின் பங்குதாரரான மாதவராவ் ஒப்புக்கொண்டிருக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு மாதாமாதம் கையூட்டு வழங்கியது தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற திருநாள்களுக்கும் கையூட்டுக் கொடுத்து வந்திருப்பதாக குட்கா நிறுவனங்களின் அதிகாரிகள் வருமான வரித்துறையிடம் கூறியுள்ளனர்.

webdunia

 

 
இந்தக் கணக்குகள் அனைத்தும் எம்.டி.எம் குட்கா என்ற ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டதுதான். இதுதவிர, சென்னை செங்குன்றத்தில் ஏராளமான குட்கா ஆலைகள் செயல்பட்டு வந்தன. சுகாதார அமைச்சரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 4 குட்கா ஆலைகள் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்தன. இந்த ஆலைகளிலிருந்து மட்டும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு மாதம் ரூ.6 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இவ்வளவுக்குப் பிறகும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு இதுவரை எந்த விசாரணைக்கும் ஆணையிடவில்லை. இதுதவிர, சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பெயரளவில் விசாரணைக்கு ஆணையிடப்பட்டபோதிலும், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
 
தமிழக அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தும்படி வருமானவரித்துறை கடிதம் எழுதுவதும், அதைத் தமிழக அரசு கிடப்பில் போடுவதும் இது முதல்முறையல்ல. மணல் கொள்ளை சேகர் ரெட்டியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின்போது கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் தற்போதைய தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாகக் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியிருந்தது. 
 
அதுமட்டுமின்றி, ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குக் கையூட்டு கொடுத்தது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இவற்றில் எந்தப் பரிந்துரை மீதும் தமிழக அரசு இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் பணியை மட்டுமே செய்து வருகிறது. இது வெட்கக்கேடானது.
 
ஜனநாயகம் எனப்படுவது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சியாகும். ஆனால், தமிழகத்திலோ ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஊழல் குற்றவாளிகளால் நடத்தப்படும் ஊழலாட்சிதான் நடைபெறுகிறது. ஆட்சியாளர்களுக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் குட்கா ஊழல், மணல் ஊழல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஊழல் குற்றவாளிகளுக்கும், அவர்களைப் பாதுகாத்த ஆட்சியாளர்களுக்கும் மக்கள் தண்டனை அளிப்பர்" என்று கூறியுள்ளார்.
 
என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபர் ; முதலை கடித்ததில் கையை இழந்தார்