மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நலத்திட்ட உதவிகள் போதுமானவையாக இல்லை என்று மாற்றுத்திறனாளிகள் கூறி வந்த நிலையில், இன்று உதவித் தொகையை உயர்த்துதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் கலைந்து செல்ல மறுத்த நிலையில் போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை குறித்து பேசிய சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K