Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜாவின் கோபத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம்

இளையராஜாவின் கோபத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம்
, வியாழன், 17 டிசம்பர் 2015 (18:39 IST)
பீப் பாடல் குறித்து ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு கோபமாக பேசிய இசையமைப்பாளர் இளையராஜாவின் செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


 
 
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை பற்றி இசையமைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பத்திரிக்கையாளர்  “பீப் பாடல் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார். அதில் கடும் கோபமடைந்த இளையராஜா அந்த பத்திரிக்கையாளரிடம் “உனக்கு அறிவிருக்கிறதா?” என்று கேட்டு அவரை ஒரு கை பார்த்து விட்டார்.
 
இளையராஜாவின் இந்த செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்:
 
சென்னையில், விழா ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜாவிடம், தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள சிம்பு, அனிரூத்தின் "பீப் சாங்" குறித்து கருத்து கேட்ட  ஒரு செய்தியாளரை பார்த்து "என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியுள்ளது" என்று மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார் இளையராஜா. 
 
இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து, நடிகர் சிம்புவால் பாடப்பட்ட "பீப் சாங்", பெண்களை மிக கேவலமாக சித்தரித்துள்ளதால், அனிரூத் மற்றும் சிம்புவை கைது செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சிம்புவும், அனிரூத்தும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 இந்நிலையில், திரைப்படத்துறையில் இசையமைப்பாளர் ஒருவரின் செயலால் தற்போது எழுந்துள்ள சர்சை குறித்து, செய்தியாளர் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கருத்து கேட்டதில் என்ன தவறுள்ளது? அந்த கேள்விக்கு பதிலளிக்க விருப்பமில்லையென்றால் அதை இளையராஜா வெளிப்படையாக தெரிவித்திருக்கலாமே? அதைவிடுத்து, சமூகத்தில் அனைவராலும் மதிக்கத்தக்க இடத்தில் உள்ள இளையராஜா, கேள்வி கேட்ட செய்தியாளரை பொறுப்பில்லாமல் மிகவும் தரக்குறைவாக பேசியது, தமிழ் சமூகம் அவருக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தை உதாசினப்படுத்தும் செயல் என்றே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கருதுகின்றது. 
 
 சம்பந்தப்பட்ட நபர்களிடம், துணிச்சலாக கேள்விகளை முன் வைப்பதன் மூலம், மக்களின் வாழ்நிலையை மாற்றக்கூடிய நிகழ்வுகளையும், அதற்குப்பின்னால் உள்ள அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது செய்தியாளர்களின் சமூக கடமையாகும். அந்த வகையில், கேள்விகேட்ட செய்தியாளரை மிகவம் தரக்குறைவாக பேசிய இசையமைப்பாளர் இளையராஜாவின் செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன், தனது செயலுக்காக இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.
 
மக்கள் கொடுக்கும் அங்கீகாரமே, ஒருவனுக்கு கலைஞன் என்ற அந்தஸ்தை வழங்குகின்றது. அவ்வாறு, மக்களால் போற்றப்படும் கலைஞர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதை இந்த நேரத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
 
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil