Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பட்ஜெட் பற்றி தலைவர்கள் கருத்து

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (16:48 IST)
2016-17ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று சபை முனைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதுபற்றி தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளர்.


 
 
இதுபற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக நிதிநிலை திருத்த பட்ஜெட்டில், பல திட்டங்களை அறிவித்திருப்பது ஒருபுறம் வரவேற்பதாக இருப்பினும், ஒருபுறம் பற்றாக்குறை பட்ஜெட்டாகவே கருத்தபடுகிறது. தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. கவர்ச்சி திட்டங்களுக்கும், இலவச திட்டங்களுக்கும் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.
 
கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் 110 விதியின் கீழ் சென்றமுறை அறிவித்த திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. அதேபோல் இந்த முறையும் அறிவிப்பு அரசாக மட்டும் இல்லாமல், செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும். "ஏட்டுச்சுரக்காய் கூட்டுக்கு உதவாது" அதுபோல் இந்த திட்டங்கள் ஏட்டளவில் மட்டும் இல்லாமல், செயல் அளவில் இருக்க வேண்டும். வரி இல்லாத பட்ஜெட் என்று பெருமை பேசினாலும், பற்றாக்குறை என்ற வலியுள்ள பட்ஜெட்டாகவே கருதப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழக பட்ஜெட் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக சட்டப்பேரவையில் 2016-17 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். தமிழக அரசின் நிர்வாகத்திறன் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
 
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அவற்றை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளில் மது விற்பனை நேரம் குறைப்பு, மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைப்பு, கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட 4 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டார். மக்களுக்கு பயனளிக்கும் மற்ற வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே பரிசாக கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
 
தமிழகத்தில் பாரத ஸ்டேட் வங்கி அதன் கல்விக்கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றுவிட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் அளித்த நெருக்கடியால் மதுரையில் லெனின் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கல்விக்கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியிருந்த நிலையில், அதைச் செய்ய தவறிவிட்டதிலிருந்தே, மாணவர்கள் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறையில்லை என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல், பணிக்கு செல்லும் மகளிருக்கு 50% மானியத்தில் இரு சக்கர ஊர்திகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது.
 
அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்த அரசு, திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை.இதன்மூலம் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை அரசு மீண்டும் கிடப்பில் போட்டிருக்கிறது.
 
மோசமான நிர்வாகம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயருவதற்கு வழிவகுத்து விட்டு, புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று கூறுவது ஏமாற்று வேலை ஆகும். தமிழ்நாட்டில் 83.35 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கோ, மக்களின் வறுமையை ஒழிப்பதற்கோ எந்த திட்டமும் அறிவிக்கப்பட வில்லை. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து ஆராய உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அப்பரிந்துரைகள் எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டு இருந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
 
அதிமுக ஆட்சிக்கு வந்தால் கிரானைட் மற்றும் தாதுமணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை அரசே விற்பனை செய்யும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்புகள் இல்லை என்பதால் இயற்கைவளக் கொள்ளையர்களிடம் ஆளுங்கட்சி விலைபோய் விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. அதற்கான மசோதாவை நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும்.
 
தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் எந்த ஒரு துறையிலும் வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட முடியவில்லை. கடந்த ஆண்டில் ரூ.96,083 கோடி வரி வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ரூ.86,537 கோடி மட்டுமே ஈட்டப்பட்டிருக்கிறது. வணிக வரி ரூ.72,068 ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அதைவிட சுமார் ரூ.5,000 கோடியும், மோட்டார் வாகன வரி வருவாய் ரூ.4882 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் அதைவிட ரூ.497 கோடியும் குறைவாகவே ஈட்டப்பட்டிருக்கிறது. வரி இல்லாத வருவாயும் பெருமளவில் குறைந்திருக்கிறது. தமிழக அரசின் நிர்வாகத்திறமையின்மையையே இது வெளிப்படுத்துகிறது.
 
2016-17 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.40,533 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. இதை சமாளிக்க நடப்பாண்டில் மட்டும் ரூ.41,085 கோடி அளவுக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும். இதனால் நடப்பாண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ.2,52,431 கோடியாக இருக்கும். இதற்கான வட்டியாக ரூ.21,215 கோடி செலுத்த வேண்டியிருக்கும். இவை எதுவுமே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.
 
தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பான ரூ. 1.64 லட்சம் கோடியில் ஊதியம், ஓய்வூதியம், மானியம், கடனுக்கான வட்டி ஆகியவற்றுக்காக செலவு செய்யப்படும் தொகை மட்டும் ரூ. 1,54,536 கோடி ஆகும். அதாவது மொத்த வருவாயில் 96 விழுக்காட்டை ஊதியம், மானியம், கடன் வட்டி ஆகியவற்றுக்கே செலவிட்டால் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட நிதியே இருக்காது; அதனால் வளர்ச்சியும் இருக்காது. ஏற்கனவே, நிதிப்பற்றாக்குறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், விரைவில் கடனிலும் தமிழகம் முதலிடம் பிடிக்கும். அவ்வகையில் தமிழகத்தை மீளமுடியாத கடன் சுமையில் தள்ளியது மட்டுமே ஜெயலலிதா அரசின் சாதனையாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் :
 
“தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட திருத்திய பட்ஜெட்டை, வெறும் வெற்று அறிக்கை. தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது. 
 
இளைஞர் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, விவசாயிகள் கோரிக்கை குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. விவசாயிகளின் வருவாய் 3 மடங்கு அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு என்னவாயிற்று?  தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைதான் நீடிக்கிறது.  இந்த நிதி நிலை அறிக்கை வெற்று அறிக்கையாக மட்டுமே உள்ளது. நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான திட்டம் ஏதும் பட்ஜெட்டில் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்