Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிளவுபடுத்த அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது - தா.பாண்டியன் குற்றச்சாட்டு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிளவுபடுத்த அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது - தா.பாண்டியன் குற்றச்சாட்டு
, ஞாயிறு, 12 ஏப்ரல் 2015 (13:06 IST)
இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிளவுப்படுத்த தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது என்றும், அதை பகிரங்கமாக விரைவில் வெளியிடுவேன் என்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தா.பாண்டியன், “ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக கூலித்தொழிலாளர்கள் கடந்த 6ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். அநியாயமாக கொல்லப்பட்ட தமிழக கூலித்தொழிலாளர்களுக்கு ஆந்திர அரசும், தமிழக அரசும் நிதி உதவி செய்ய வேண்டும்.
 

 
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசர சட்டமாக கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. இது விவசாய நிலத்தை பறிக்கும் சட்டம். அதை அதிமுக ஆதரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். நாடே எதிர்க்கிற போது, தமிழக அரசும் எதிர்க்க வேண்டும்.
 
கடந்த 2 நாட்களாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் மாநில செயலாளராக முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முறைகேடு, வாக்குப்பதிவு சரியாக நடத்தவில்லை என 2 நபர்கள் குற்றஞ்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
 
கட்சி உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் மாநிலக்குழு உறுப்பினர்கள் அல்ல. அவர்கள் ஒழுங்குமுறையை மீறியவர்கள் ஆகிறார்கள். இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் வெறும் ஏவப்பட்ட அம்புகள் தான்.
 
தேர்தலை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிளவுப்படுத்த தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது. அதை விரைவில் பகிரங்கமாக உரிய காலத்தில் வெளியிடுவேன். எங்களை பொறுத்தவரையில் விதிகள் மீறப்படவே இல்லை. இதுபோன்ற சீர்குலைக்கும் செயல்களை ஒழிப்பதில் கட்சி தோழர்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil