Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
, திங்கள், 12 அக்டோபர் 2015 (21:52 IST)
சென்னையில் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்திற்கு  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னையில், அண்ணா சமாதி அருகே சில கோரிக்கைகளை முன்வைத்து  மாநிலக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது வேதனையளிப்பது மட்டுமின்றி, கடும் கண்டனத்திற்குரியது.
 
சென்னையிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாநிலக் கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் மட்டும் நடைபெறவில்லை.
 
இது குறித்து மாணவர்கள் தரப்பில் அளித்த மனுக்களும், விடுத்த கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை. தேர்தலை நடத்தாமல் இருக்க நியாயமான காரணங்களை  கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு விளக்கிக் கூறவில்லை.
 
எனவே, மாணவர் பேரவை தேர்தலை நடத்தாமல் மெத்தனமாக உள்ள நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அமைதியாக மறியல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
 
நிர்வாகத்திலும், கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்ய இது போன்ற பேரவைத் தேர்தல் அவசியம் என்பது அரசு உணர வேண்டும்.
 
இந்த சூழலின் பின்னனியில்தான் இளம் பருவத்தில் உள்ள மாணவர்களை தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி அரசியலில் ஈடுபட ஊக்குவிப்பது அவசியமாகிறது.
 
கொள்கை முடிவுகள் எடுப்பதிலிருந்தும், ஜனநாயகத்திலிருந்தும் மாணவர்களை இது போல்  ஒதுக்கி வைப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு வலு சேர்க்காது.
 
எனவே, கல்லூரி முதல்வரும், நிர்வாகமும் மாணவர்களுடன் மனம் திறந்து பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil