Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேகதாது பிரச்சனையில் தமிழக கட்சிகள் ஓரணியில் திரள ராமதாஸ் வேண்டுகோள்!

மேகதாது பிரச்சனையில் தமிழக கட்சிகள் ஓரணியில் திரள ராமதாஸ் வேண்டுகோள்!
, ஞாயிறு, 19 ஏப்ரல் 2015 (19:52 IST)
மேகதாது பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேற்றுமைகளை களைந்து ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து கர்நாடகத்தில் அம்மாநில அரசின் ஆதரவுடன் கன்னட அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றன. போராட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பாராட்டியிருப்பதுடன், போராட்டக்காரர்களை வரவேற்று வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.
 
மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் மத்திய, மாநில ஆளுங்கட்சிகள் தவிர்த்த பிற கட்சிகளும், வேளாண் அமைப்புகளும் கடந்த 28ஆம் தேதி நடத்திய போராட்டத்திற்கு பதிலடியாகத் தான் கன்னட அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளன. தமிழகத்தில் அரசின் ஆதரவு இல்லாததால் முழு அடைப்புப் போராட்டம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறாத நிலையில், கர்நாடகத்தில் அரசின் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. காவிரிப் பிரச்சனையை தமிழகமும், கர்நாடகமும் எவ்வாறு அணுகுகின்றன என்பதற்கு இந்த போராட்டங்கள் சிறந்த உதாரணம் ஆகும். காவிரிப் பிரச்சனை தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சனை என்ற போதிலும் தமிழக அரசுக்கும், ஆளுங்கட்சிக்கும் அதைத் தாண்டிய பிரச்சனை இருப்பதால் கர்நாடகத்துக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம் நடத்தப்படுவதையே விரும்பவில்லை.
 
உழவர் அமைப்புகள் நடத்திய போராட்டம் வெற்றிபெற கூடாது என்பதற்காக ஏராளமானோரை கைது செய்ததுடன், போராட்டத்திற்கான தடயமே தெரியாமல் அரசு பார்த்துக் கொண்டது. அதேநேரத்தில் உழவர்களுக்கு எதிரான அரசு என்ற அவப்பெயர் ஏற்படுவதைத் தடுக்க பேரவைக் கூட்டத்தை ஒத்திவைத்ததுடன், பிரதமரை சந்திப்பதற்காக எம்.பி.க்கள் குழுவை டெல்லிக்கு அனுப்பியது. மத்தியில் ஆளும் பாஜக -வோ, இத்தகைய போராட்டங்களை ஆதரிக்க முடியாது என்று கூறி இந்த பிரச்சனையிலிருந்தே ஒதுங்கிக் கொண்டது.
 
ஆனால், கர்நாடகத்தில் அப்படியில்லை. யார் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று அம்மாநில அரசு பார்க்கவில்லை. மாறாக மாநில மக்களின் உணர்வுகள் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கில் பேருந்துகளை இயக்காமலும், போராட்டக்காரர்களின் செயல்பாடுகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்தும் முழு அடைப்பை வெற்றி பெறச் செய்தது. தமிழக பாஜக -வைப் போல கர்நாடக பாஜக நழுவவில்லை. மாறாக இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் என வெளிப்படையாக அறிவித்தது.
 
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குத் தான் கடுமையான பாதிப்பு ஏற்படும். இதனால் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசு, தனது அநியாய செயலை நியாயப்படுத்த எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பது தமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பாடம் ஆகும். அதுமட்டுமின்றி, போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகளை அழைத்து அவர்களிடம் மனுக்களைப் பெற்ற கர்நாடக முதலமைச்சர், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டதும், இந்த ஆண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கும்; அதை யாரும் தடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
 
மேகதாது அணை குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக வரும் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் குழுவுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவிருப்பதாகவும், இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் சித்தராமய்யா கூறியிருக்கிறார். இதை வெற்று வார்த்தைகளாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. திட்ட அறிக்கை தயாரிப்புக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி ஒதுக்கியது மட்டுமின்றி, மற்ற ஏற்பாடுகளையும் கர்நாடக அரசு முழுவீச்சில் செய்து வருவதை பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் கர்நாடகத்தைவிட இன்னொரு மடங்கு வேகமாக தமிழக அரசு செயல்பட்டால் தான் மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க முடியும்.
 
ஆனால், தமிழக அரசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே அடுத்து எந்தக் கோவிலுக்கு காவடி எடுக்கலாம்; எந்தக் கோவிலில் அங்கபிரதட்சனம் செய்யலாம் என்பது தான் பெரும் கவலையாக உள்ளது. 1970ஆம் ஆண்டுகளில் அலட்சியமாக இருந்ததால் தான் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளை காவிரியின் துணை நதிகளுக்கு குறுக்கே கர்நாடக அரசு கட்டியது. அதேபோன்று மீண்டும் ஒருமுறை தமிழகம் ஏமாந்துவிடக் கூடாது.
 
இப்பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேற்றுமைகளை களைந்து ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல, மேகதாது பிரச்சனை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்; மேகதாது திட்டத்திற்கு எதிராக அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று பிரதமரிடம் முதலமைச்சர் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, பல முக்கிய மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற உறுப்பினர்கள் ஆதரவு மத்திய அரசுக்கு தேவை என்பதால், மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்தினால் மட்டுமே, உழவர்களுக்கு பாதிப்பில்லாத மசோதாக்களை மட்டும் ஆதரிப்போம் என அதிமுக -வும், திமுக -வும் அறிவிக்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil