Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படேல் சமுகத்தினர் முன்னேறிய நிலையில்தான் உள்ளனர்: வைகோ பரபரப்பு தகவல்

படேல் சமுகத்தினர் முன்னேறிய நிலையில்தான் உள்ளனர்: வைகோ பரபரப்பு தகவல்
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (22:27 IST)
குஜராத்தில் 15 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட படேல் சமூகத்தினர், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வணிகத்துறைகளில் மிக முன்னேறிய நிலையில்தான் உள்ளனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்  என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தால் வன்முறை கலவரம் ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாயின.
 
படேல் சமூகத்தினரை ஒன்றுதிரட்டி போராடி வரும் ஹர்திக் படேல் என்ற இளைஞர், கடந்த ஜூலை மாதம்தான், இடஒதுக்கீடு போராட்டத்திற்கு ஒரு அமைப்பை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த, இரண்டு மாதங்களில் குஜராத் மாநிலம் முழுவதும் படேல் சமூகத்தினரை இலட்சக்கணக்கில் திரட்டுவதற்கு ஹர்திக் படேலுக்கு சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணம் என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தகவல்கள் வந்துள்ளன.
 
ஆனால், படேல் சமூகத்தினரின் இந்தப் போராட்டத்திற்கு வலிமையான பின்னணி இருப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது. ஏனெனில், குஜராத் மாநிலத்தில் 1981 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டபோது அதனை எதிர்த்து படேல் சமூகத்தினர் குஜராத் மாநிலத்தையே நிலைகுலைய வைக்கும் வகையில் வன்முறைப் போராட்டங்களில் இறங்கினர் என்பதை மறக்க முடியாது.
 
குஜராத்தில் 15 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட படேல் சமூகத்தினர், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகளில் மிக முன்னேறிய நிலையில்தான் உள்ளனர். குஜராத் மாநிலத்தின் அரசியல் அதிகாரத்திலும் படேல் சமூகம்தான் முன்னிலையில் உள்ளனர்.
 
பிற்படுத்தப்பட்டோர் என்று அரசியல் சட்டம் வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக நீதி உரிமையான இட ஒதுக்கீட்டைப் படேல் சமூகத்தினர் தங்களுக்கும் கோருவது அவர்கள் உரிமை.
 
ஆனால், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும்; இல்லையேல் இட ஒதுக்கீட்டு முறையையே இரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது அரசியல் சட்டத்திற்குச் சவால் விடும் வகையில் உள்ளது. இது போன்று,  சமூக நீதிக்கு எதிரான இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரிடம் மத்திய - மாநில அரசுகள் அடிபணிந்துவிடக் கூடாது.
 
படேல் சமூகத்தினரின் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றுள்ள ஹர்திக் படேல், ஆகஸ்ட் 28ஆம் தேதி ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தலித் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் கருத்து கூறி உள்ளார்.
 
மேலும், “இந்த நாட்டை இட ஒதுக்கீட்டு முறையிலிருந்து விடுவியுங்கள். இல்லாவிடில் மக்கள் அனைவருக்கும் இடஒதுக்கீட்டிற்கு அடிமைகளாகக் கிடப்பர். காலம் காலமாக சமுக நீதிக் கொள்கைக்கு எதிராக இருக்கும் ஆதிக்கச் சக்திகளின் குரல்தான் ஹர்திக் படேல் மூலம் ஒலித்துள்ளது.
 
இந்த நிலையில் இரண்டாம் கட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஹர்திக் படேல் தெரிவித்துள்ள கருத்துகளும், குஜராத்தில் நடத்தி வரும் போராட்டமும் அபாயகரமானவை.
 
சமூக நீதிக்கு எதிராகப் பின்னப்பட்டு வரும் சதி வலைகளை அறுத்து எறிவதற்கு அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil