Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்ணகியிடம் கருணையை எதிர்பார்க்கும் அதிமுகவினர் - மணியரசன் கடும் தாக்கு

கண்ணகியிடம் கருணையை எதிர்பார்க்கும் அதிமுகவினர் - மணியரசன் கடும் தாக்கு
, செவ்வாய், 5 மே 2015 (17:29 IST)
மக்களை ஏமாற்றுவதில் மட்டுமின்றி கடவுள்களை ஏமாற்றுவதிலும் அஇஅதிமுக-வினர் வல்லவர்கள் என்பதை ஊரறியும், உலகறியும். அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுதியவர்கள் இன்று கண்ணகியின் காலடியை வணங்கியுள்ளனர் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கடுமையாக விமர்ச்சனம் செய்துள்ளார்.
 
இது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 
 
சித்திரை முழுநிலவு நாள் கண்ணகிக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி சிலைக்கு அஇஅதிமுக அமைச்சர்கள் சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு மே 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, அஇஅதிமுக அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, இரமணா, சின்னையா,  இராஜேந்திரபாலாஜி, அப்துல்ரகிம் மற்றும் சென்னை மேயர் சைதை. துரைசாமி உள்ளிட்டோர் கண்ணகி சிலையின் காலடியில் மலர் தூவி மரியாதை செய்துள்ளனர். இது பற்றிய செய்தி படத்துடன் ஏடுகளில் வந்துள்ளது.
 
தமிழர் வரலாற்றுச் சிறப்பின் அடையாளமாகவும், அறச்சீற்றத்தின் வடிவமாகவும் விளங்குகின்ற கண்ணகியின் இதே சிலையை கடந்த 2001 டிசம்பர் மாதம், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின் பெயரில் எந்திரங்கள் வைத்து பெயர்த்தெடுத்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒரு மூளையில் தூக்கி போட்டுவிட்டார்கள். 
 
தலைமை செயலகம் வரும் போதெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கண்ணில் ஒர் அபசகுணமாக, அருவருக்கத்தக்க சிலையாக கண்ணகி சிலை நின்றது என்றும், எனவே அதை அப்புறப்படுத்த ஆணையிட்டார் என்றும் அப்போது தகவல்கள் வெளியானது.
 
தமிழர் பெருமிதங்களில் ஒன்றாக விளங்கிய கண்ணகி சிலையை அப்புறப்படுத்தியதை அறிந்து தமிழகம் முழுவதும் தமிழ் மக்கள் கொந்தளித்தார்கள். தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) ஜெயலலிதா அரசின் தமிழின வெறுப்பு நடவடிக்கை இது என்று வண்மையாக கண்டித்து அதே இடத்தில் மீண்டும் கண்ணகி சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
 
தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் இயக்கம் நடத்தியது. யாருடைய கோரிக்கையையும் ஏற்காத முதலமைச்சர் ஜெயலலிதா கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க மறுத்துவிட்டார். 
 
அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவினார்.
 
இந்த நிலையில், இத்தனை ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக இப்பொது அஇஅதிமுகவினர் கண்ணகி சிலை காலடியில் மலர் தூவி வணங்குவது முரண்பட்ட செயலாக உள்ளது.
 
கர்நாடக நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளித்த பிறகு அதிலிருந்து விடுதலையாக கோயில் கோயிலாக பூசை நடத்துவது, பால் குடம் தூக்குவது, மொட்டை அடித்துக்கொள்வது போன்ற பல்வேறு வேண்டுதல்களை செய்து வருகிறார்கள். இதன் கடைசியாக கண்ணகியிடம் கருணை கேட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. 
 
மக்களை ஏமாற்றுவதில் மட்டுமின்றி கடவுள்களை ஏமாற்றுவதிலும் அஇஅதிமுக-வினர் வல்லவர்கள் என்பதை ஊரறியும், உலகறியும். அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுதியவர்கள் இன்று கண்ணகியின் காலடியை வணங்கியுள்ளனர். அவர்கள் கண்ணகியிடம் கருணையை எதிர்பார்க்கின்றனர். ஆனால், அது அவர்களுக்கு மட்டும் கிடைக்காது என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil