தமிழகத்திற்கு உண்மையான சுதந்திரம் 16-ந்தேதி தான் கிடைக்கப்போகிறது என்று பாமக இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருத்தணியில் பாமக வேட்பாளரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அன்புமணி, ”கடந்த 50 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன. அதற்கு மாற்றாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி மக்கள்நலன் காக்க வருகிறது.
இந்தியாவுக்கு 1947-ம் வருடம் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு வருகிற 16-ந்தேதி தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கப்போகிறது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோப்பில் நான் முதல் கையெழுத்து போடப்போகிறேன்.
பாமக ஆட்சியில் பொதுமக்களுக்கு இலவசங்களை கொடுத்து ஏமாற்ற மாட்டோம். பொதுமக்களை தன்மானத்துடன் வாழ வைப்போம். இலவச கல்வி, சுகாதாரம், வேளாண் புரட்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொண்டு வருவோம். பாமக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில் 60 சதவீத திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளது” என்று கூறியுள்ளார்.