Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘எல்லாமே நான்’ என்பது இனி எடுபடாது - ஜெயலலிதாவுக்கு கி.வீரமணி எச்சரிக்கை

‘எல்லாமே நான்’ என்பது இனி எடுபடாது - ஜெயலலிதாவுக்கு கி.வீரமணி எச்சரிக்கை
, திங்கள், 23 மே 2016 (16:39 IST)
எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதோ, ‘எல்லாமே நான்’ என்ற தன்முனைப்போ இனி எடுபடுமா என்பது சந்தேகம் தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 16ஆம் தேதியன்று நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், செல்வி ஜெயலலிதா அவர்களது தலைமையில் ஆண்ட அஇஅதிமுக மீண்டும் 134 உறுப்பினர்களின் பலத்தோடு இன்று 29 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது.
 
அதைவிடக் குறிப்பிடத்தக்கது, முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெறும் 23 பேர்களை மட்டுமே எதிர்க்கட்சி உறுப்பினர்களாகக் கொண்ட திமுக, இப்போது 89 உறுப்பினர்களைக் கொண்ட பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாகவும் அமர்த்தப்பட்டுள்ளது.
 
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு வாழ்த்துகள். பதவியேற்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் அவரது சக அமைச்சர்கள் 28 பேருக்கும் நமது வாழ்த்துகள்.
 
அதுபோலவே திமுக தலைவர் கலைஞர் அவர்களது தலைமையில் எதிர்க்கட்சியாக அமர்ந்து தனது ஜனநாயகக் கடமைகளை மேலும் பயனுறு வகையில் நடத்தவிருக்கும் திமுக - காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய (கூட்டணி) கட்சிகளுக்கும் நமது வாழ்த்துகள்!
 
சில ஊடகங்கள் தொலைக்காட்சிகளில் கூறப்பட்டதுபோல், ஜெயலலிதா அம்மையார் தலைமையில் நடைபெற்ற சென்ற ஆட்சிக்கு எதிரான மக்கள் மனோபாவம் இல்லை என்பது உண்மை இல்லை!
 
தேர்தல் பற்றிய மதிப்பிடுகள்:
 
எதிரான மனோபாவம் இருந்ததால் தான் முந்தைய ஆளுங்கட்சி பலம். 146 லிருந்து 134 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. போட்டியிட வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அமைச்சர்களில் 5 முக்கிய (சீனியர்) அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.
 
நாடாளுமன்றத் தேர்தலின்போது பெற்ற வாக்கு விகிதாசாரம் இப்போது குறைந்துள்ளது. முந்தைய தேர்தலின்போது (2011) வெற்றி பெற்ற அதிமுகவினர் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு - இப்போது பல தொகுதிகளில். எதிர்க்கட்சி திமுகவிற்கும் ஆளும் கட்சியாக வந்துள்ள அதிமுகவுக்கும் உள்ள வேறுபாடு 1.1 சதவிகிதம் மட்டுமே.
 
நூலிழையில் தான் ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜனநாயகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பவை தங்களது கடமைகளை செவ்வனவே செய்ய வேண்டும் என்பதே வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்பு. ஆளும் தரப்பு - கடந்த முறை நடந்து கொண்டதுபோல நடந்து கொள்ளக் கூடாது!
 
சென்ற முறை ஆளுங்கட்சி அதிமுகவும் அதன் முதல்வரும், அமைச்சர்களும், அதன் சபாநாயகரும் கடைப்பிடித்த அணுகுமுறைகளை (சட்டமன்ற நடவடிக்கைகளின்போது) - இம்முறை முற்றிலும் மாற்றிக் கொண்டால்தான் அது இவர்களது உண்மையான வெற்றியாக ஆகி ஜனநாயகம் செழிக்கும்;
 
எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதோ, ‘எல்லாமே நான்’ என்ற தன்முனைப்போ இனி எடுபடுமா என்பது சந்தேகம் தான்!
 
“சட்டமன்றத்தில் நாங்கள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம் என்ற திமுக தலைவர், பொருளாளர் ஆகியோரின் கருத்துக்கள் பெரிதும் அனைவராலும் வரவேற்கப்படக் கூடியவையே!
 
ஆட்சி இனி வெறும் ‘காட்சியாக’ அமையாமல், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் ஆட்சி என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய மகத்தான கடமைதான் ஆளும் கட்சியின் மாண்பை உயர்த்தும்!
 
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் (குறள்-448)
என்பதுதான் முக்கியம்!
 
எல்லாவற்றையும்விட ஆளுங்கட்சியாக வந்துள்ள அதிமுக வன்ம அரசியல் பார்வைக் கண்ணோட்டம் - செயல்முறைகளைக் கைவிட்டு, நல்ல ஆக்கபூர்வ கருத்தை எதிர்க்கட்சியினரோ வேறு வெளியில் உள்ளவர்களோ சொன்னாலும் சீர்தூக்கி ஆராய்ந்து தேவையானவை என்று கருதினால் செயல்படுத்தத் தயங்கக் கூடாது!
 
பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள ஆளுங்கட்சி, அதன் முதல் அமைச்சர் அம்மையார் அவர்கள் பதவியேற்கும்முன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்தது மகிழ்ச்சி. அதைவிட முக்கியம் ஆட்சியில் செயல்படுகையில் அத்தலைவர்களின் சீலங்களுக்கு - கொள்கை நெறிமுறைகளுக்கு மரியாதை காட்டி முக்கியத்துவம் தர வேண்டும்!
 
அறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் பகைவர்களையும் நண்பராக்கி வெற்றி கண்ட முதல்வராகவே புகழுடன் இன்றும் மறையாமல் வாழுகிறார்! இதை இன்றைய முதல் அமைச்சரும் நினைவிற் கொண்டு செயல்படுவது முக்கியம்!
 
தேர்வுக்குப்பின் ஆட்சி அமைத்தபின் அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்களே! வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்குமே முதலமைச்சர் என்பதை நினைவிற்கொண்டு செயல்படுவது தான் ஜனநாயக நெறிமுறையாகும்! முதலமைச்சர் தமது அமைச்சர்களை ‘ஜீரோக்களாக’ வைத்திருக்காமல் ‘ஹீரோக்களாக’ தகுதி பெற  - ஊழலுக்கு இடந்தராத நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதும் ஜனநாயக அடிப்படை - எதிர்பார்ப்பு” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபோதையில் சிங்கம் இருக்கும் இடத்தில் குதித்த வாலிபர் : அதிர்ச்சி வீடியோ