Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனியும் ஜெயலலிதாவின் நடிப்புக்கு மக்கள் மயங்க மாட்டார்கள் - ராமதாஸ் காட்டம்

இனியும் ஜெயலலிதாவின் நடிப்புக்கு மக்கள் மயங்க மாட்டார்கள் - ராமதாஸ் காட்டம்
, புதன், 16 டிசம்பர் 2015 (14:28 IST)
அடுத்த தேர்தலில் புரட்சி படைப்பதற்காக புதுத் தெளிவு பெற்றுள்ள வாக்காளர்கள், இனி ஜெயலலிதாவின் நடிப்புக்கு மயங்கமாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை பினவருமாறு:
 
"சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும், கடலூர் மாவட்டத்தையும் மூழ்கடித்த மழை வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், 15 நாட்களாக அவர்களை எட்டிக்கூட பார்க்காத ஜெயலலிதா இப்போது வாட்ஸ்-அப் மூலம் அவர்களின் துயரத்தை நினைத்து  வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
 
துன்பத்தை ஏற்படுத்தியவரே அவர்தான் என்பதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் ஏன்? :
 
ஜெயலலிதாவின் ஆறுதலைக் கேட்கும் போது, துக்க வீட்டில் கொலைகாரன் வந்து ஆறுதல் கூறும் போது என்ன உணர்வு ஏற்படுமோ, அதே உணர்வு தான் ஏற்படுகிறது.
 
‘‘வெள்ளத்தால் ஏற்பட்ட பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும், எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி’’ என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். துன்பத்திலிருந்து மக்களை அவர் மீட்பது இருக்கட்டும். இந்த துன்பத்தை ஏற்படுத்தியவரே அவர்தான் என்பதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் ஏன்? என்பதுதான் எனது கேள்வி.
 
சென்னையில் மழை இல்லாத நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து படிப்படியாக தண்ணீரை திறந்து விட்டால், அதிக மழை பெய்யும் ஏரி நீரைக் கட்டுக்குள் வைத்து வெள்ளம் ஏற்படாமல் தடுக்கலாம் என்று கூறி, அதற்கான அனுமதி கோரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அனுப்பிய கோப்பின் மீது 4 நாட்களாக முடிவு எடுக்காமல் முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் செய்த தாமதத்தால்தானே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இரவு நேரத்தில் வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும் நிலை ஏற்பட்டு, அதனால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது.
 
இதற்கு ஜெயலலிதா தானே பொறுப்பேற்க வேண்டும். இச்சிக்கலில் குற்றவாளி என்ற நிலையிலிருந்து தப்புவதற்காக ‘நல்ல மீட்பர்’ வேடம் போடும் ஜெயலலிதாவிடம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
 
இதுதான் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் அழகா? :
 
‘‘போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறேன். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் இருக்கிறேன்’’ என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு முட்டாள்களாக அவர் நினைக்கிறார் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம் ஆகும்.
 
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு 16 நாட்களாகிவிட்ட நிலையில் சென்னையின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. இதுதான் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் அழகா? என்பதை ஜெயலலிதாதான் விளக்க வேண்டும். சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களையும் நவம்பர் 8ஆம் தேதி முதல் 40 நாட்களாக மழை-வெள்ளம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
 
ஒரு நாளாவது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பாரா? :
 
உங்களுக்காக நான்... உங்களோடு நான் என்று கூறும் ஜெயலலிதா ஒரு நாளாவது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பாரா? 4 மாவட்டங்களையும் சேர்ந்த கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் தவித்த போதும், பசியில் துடித்த போதும், உற்றார்-உறவுகளை வெள்ளத்திற்கு பலி கொடுத்து கதறிய போதும் எட்டிக் கூட பார்க்காமல் போயஸ் தோட்டத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, இப்போது திடீரென வாட்ஸ் அப் வசனம் பேசி ஏமாற்ற முயன்றால், ஏமாறுவதற்கு தமிழக மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளை மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்தி ஓய்ந்து போன வாக்காளர்கள் அல்ல... அடுத்த தேர்தலில் புரட்சி படைப்பதற்காக புதுத் தெளிவு பெற்றுள்ள வாக்காளர்கள். அவர்கள் இனி நடிப்புக்கு மயங்கமாட்டார்கள்.
 
‘‘உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்.  எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள் தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம் தான்’’ என்று தம்மை இயேசுநாதராகவே நினைத்துக் கொண்டு வசனங்களை வாரி இறைத்திருக்கிறார் ஜெயலலிதா.
 
தமக்கென்று தனி வாழ்க்கை கிடையாது என்றால், ஊழல் பணம் வசூலிக்கப்படுவது எதற்காக? :
 
இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படியே வசனம் பேசியும், கிளிசரின் போடாமல் கண்ணீர் வடித்தும் மக்களை ஏமாற்றி விடலாம் என ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை. மக்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் தாமே சுமப்பதாக ஜெயலலிதா கூறுவது சரியல்ல... மக்கள் மீதான அனைத்து துன்பங்களையும் சுமத்துபவர் ஜெயலலிதா என்பது தான் உண்மையாகும்.
 
தமக்கென்று தனி வாழ்க்கை கிடையாது என்றால், தினம் தோறும் அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழல் பணம் வசூலிக்கப்படுவது எதற்காக? கொடநாட்டில் 898 ஏக்கரில் மாளிகை, சிறுதாவூரில் 25.4 ஏக்கரில் பண்ணை வீடு, பையனூரில் 3 ஏக்கரில் பண்ணை வீடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1190 ஏக்கர் நிலம், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் 300 ஏக்கர் நிலம், முதல் 5 ஆண்டு ஆட்சியில் குவித்த 23 கிலோ நகைகள் ஆகியவை எதற்காக? மக்கள் குடியை கெடுத்து வருவாயை கொட்டும் மிடாஸ் உள்ளிட்ட 44 பினாமி நிறுவனங்கள் எதற்காக?
 
ஜெயலலிதாவுக்கு உறவினர்கள் கிடையாதாம். அப்படியானால் போயஸ் தோட்டத்தில் முகாமிட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டிப்படைப்பவர்கள் யார்? 44 நிறுவனங்களை நிர்வகிப்போர் யார்? ஆட்சியைப் பயன்படுத்தி கொள்ளையடித்த பணத்தில் திரையரங்களை வாங்கிக் குவிப்பவர்கள் யார்? என்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும்.
 
அம்மா என்பதை தனது வணிகப் பெயராக மாற்ற முயன்றார் ஜெயலலிதா :
 
எனக்கு எல்லாமும் நீங்கள் தான் என்கிறார் ஜெயலலிதா. அதற்கு பதிலாக உங்களுடையது எல்லாமும் என்னுடையது தான் என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அதேபோல், என் இல்லமும், உள்ளமும் தமிழகம் தான் என்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த தமிழகத்தையும் வளைத்து போட்டு விட்டதால் தமிழகமே எனது இல்லம் தான் என ஜெயலலிதா பதிலளித்திருந்தால் சாலச் சிறந்ததாக இருந்திருக்கும்.
 
பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரே மறந்து போகும் அளவுக்கு தமிழக மக்கள் தம்மை ‘அம்மா’ என்று அழைப்பதாக ஜெயலலிதா கூறுவதைப் பார்க்கும் போது அவர் மாயையில் வாழ்வதை உணர முடிகிறது. எந்த தமிழனும் தாயைத் தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைக்க மாட்டான். அம்மா என்பதை தனது வணிகப்பெயராக (Brand Name) மாற்ற ஜெயலலிதா முயன்றார்.
 
இதற்காக மதுக்கடை தவிர மற்ற அனைத்துக்கடைகளுக்கும் அம்மா என்ற பெயரைச் சூட்டினார். போலியாக அவரது புகழ்பாடுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் அமைச்சர்கள் அதை வழி மொழிந்தனர். ஜெயலலிதாவைப் பற்றிய மக்களின் மன ஓட்டம் என்ன? என்பதை மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் போது தான் புரிந்து கொள்வார்.
 
அதேபோல், ஜெயலலிதா தங்கள் துயர்துடைக்க வேண்டும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக இனியும் செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தி உயிரை எடுக்காமல் இருந்தால் போதும் என்று தான் மக்கள் கருதுகின்றனர்.
 
மக்களை ஆபத்தில் சிக்கவிட்டு தப்பித்துக் கொள்ளும் சுயநலப்பிறவி :
 
முதல்வர் என்பவர் படைத்தளபதி போரில் படையை வழி நடத்திச் செல்வதைப் போல நெருக்கடியான நேரத்தில் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும். முதலமைச்சர் என்பவர் பலம் வாய்ந்த கழுகை எதிர்த்து போராடி குஞ்சுகளைக் காக்கும் கோழியைப் போல இருக்க வேண்டும்.
 
ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் அல்ல. மாறாக நெருக்கடியான நேரங்களில் மக்களை ஆபத்தில் சிக்கவிட்டு தப்பித்துக் கொள்ளும் சுயநலப்பிறவியாகவே இருக்கிறார் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.
 
முதலமைச்சர் என்பவர் காட்சிக்கு எளியனாய், மக்கள் நினைத்த நேரத்தில் சந்திக்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால், ஒரு நாளைக்கு 23 மணி நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சரைச் சுற்றி உடன்பிறவா சகோதரி மற்றும் அவரது உறவினர்கள் ஓர் அடுக்கு, ஓய்வு பெற்ற பிறகும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் அடுத்த அடுக்கு, தலைமைச் செயலர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இன்னொரு அடுக்கு 3 அடுக்குகள் சூழ்ந்திருக்கின்றன.

தமிழக மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் :
 
இவர்கள் தான் உலகம்... இவர்கள் சொல்வதே வேதம் என்று தான் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர்களைத் விர வேறு எவரும் அவரை அணுக முடியாது.
 
அப்படி இருக்கும் போது வழக்கமான வசனங்களைப் பேசி மக்களை ஏமாற்ற முயல்வது வீண் வேலை. தமிழக மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். வரும் தேர்தலில் மக்கள் தங்களின் கோபத்தை காட்டுவர். அப்போது தான் ஜெயலலிதா கூறிய, ‘‘இப்பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன்’’ என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் விளங்கும்".
 
என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil