Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"பினாமி அரசு என விமர்சிப்பதா?": கருணாநிதி-ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

, வியாழன், 27 நவம்பர் 2014 (18:28 IST)
இதுகுறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
திமுக தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தற்போது நடைபெற்று வரும் அதிமுக அரசை, பினாமி அரசு என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர். குழப்பங்கள் சற்று தெளிந்தவுடன், ‘ஓ’ என்ற எழுத்துக்கும் பூஜ்யம் என்ற எண்ணுக்கும் இடையே இருந்த குழப்பம் எவ்வாறு தீர்ந்ததோ அதேபோல இந்தக் குழப்பமும் தீர்ந்து விடும் என நான் நம்பியிருந்தேன்.
 
ஆனால் ‘பினாமி அரசு’ என்னும் சொற்றொடர் குறித்த குழப்பம் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இன்னமும் தீரவில்லையென்பதால், இது பற்றிய விளக்கத்தை அளிப்பது எனது கடமையெனக் கருதுகிறேன்.
 
கருணாநிதி தனது கேள்வி பதில் அறிக்கையில், “அதிமுகவினர், திமுக அரசை “மைனாரிட்டி திமுக அரசு” என்று இன்று வரை அழைத்ததற்கு, தற்போதுள்ள அதிமுக அரசை “பினாமி அதிமுக அரசு” என்று திமுகவினர் அழைத்து வருகிறார்கள். ஆனால் “பினாமி அதிமுக அரசு” என்பது எவ்வாறு பொருந்துகிறது?” என தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டு, “பினாமி” என்றால் உரிமை கொண்டாட ஒருவர் இருப்பார்; உண்மையான உரிமை வேறோருவரிடம் இருக்கும். தமிழகத்தில் தற்போதுள்ள முதலமைச்சர் அப்படித்தானே இருக்கிறார்... முதலமைச்சர் தான் அப்படி என்றால், நிர்வாகத்திற்குத் தலைமையேற்று நடத்த வேண்டியவர் தலைமைச் செயலாளர்.
 
தற்போது தலைமைச் செயலாளர் பெயருக்குத் தான் இருக்கிறாரே தவிர, அதிகாரம் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்து தற்போது ஆலோசகராக இருப்பவரிடம்தான் உள்ளது. அதுபோலத்தான், காவல்துறையைப் பொறுத்த வரை டி.ஜி.பி.தான் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். தற்போது அந்தத் துறையிலும் ஆலோசகர் ஒருவர் வந்து விட்டார். எனவே ‘பினாமி அரசு’ என்பது பொருத்தமாகத் தானே உள்ளது என பதில் கூறியுள்ளார்.
 
பினாமி என்பது உண்மையான விற்பனையாளர் அல்லது வாங்குபவர் அல்லாது வேறு ஒருவரின் பெயரில் செய்யப்படும் விற்பனை அல்லது வாங்குதல் என்பதாகும். எனவே, ‘பினாமி’ என்பதன் பொருள் என்ன என்பதை கருணாநிதி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அரசு என்பதும், முதலமைச்சர் பதவி என்பதும் உரிமை பற்றியது அல்ல; அது கடமை பற்றியது என்பது கடமை உணர்வு உள்ளவர்களுக்குத் தான் புரியும். கருணாநிதி அதிகாரத்தைப் பற்றி அதாவது அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது பற்றி தனக்கு கற்பனையாகத் தோன்றியுள்ளதை தெரிவித்துள்ளதால், வார்த்தைகளைக் குழப்பமாக பயன்படுத்தியுள்ளார் போலும்.
 
மேலும் அடுத்த பக்கம்..

ஆலோசகர்களிடம் அதிகாரம் இருப்பதாக தனது அறிக்கையில் கற்பனை செய்துள்ளார். ஆலோசகருக்கு உள்ள கடமைகள் வேறு; தலைமைச் செயலாளருக்கு உள்ள கடமைகள் வேறு; காவல்துறை தலைமை இயக்குநருக்கு உள்ள கடமைகள் வேறு; இந்த வித்தியாசங்கள் எல்லாம் தெரியாவிட்டால் இது போன்று தன்னையும் குழப்பிக்கொண்டு மற்றவர்களையும் குழப்ப எத்தனிக்கவேண்டும் தான்.
 
தலைமைச் செயலாளர் என்னென்ன கோப்புகளைப் பார்க்க வேண்டும்? முதலமைச்சருக்கு கோப்புகளை எவ்வாறு அனுப்ப வேண்டும்? என்பது பற்றியெல்லாம் அரசின் அலுவல் விதிகள் மற்றும் தலைமைச் செயலகப்பணி விவரங்கள் ஆகியவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆலோசகர் என்பவர் அரசுக்கும்,  முதலமைச்சருக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளில் ஆலோசனை வழங்குபவர் ஆவார். அரசின் கோப்புகளை ஆலோசகர் பார்ப்பதும் இல்லை. அதில் கையெழுத்து இடுவதும் இல்லை.  முதலமைச்சராக இருந்தபோது இதைப்பற்றி அவர் கேட்டு தெரிந்திருந்தால் இது போன்ற ஒரு ஐயப்பாடு எழ வாய்ப்பில்லை. 
 
மத்திய அரசிலும் ஆலோசகர் பதவி இருப்பது கருணாநிதிக்கு தெரியுமா? தெரியாதா? திமுக அங்கம் முற்போக்கு கூட்டணி அரசில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஆலோசகர் என்ற பதவிகள் இருந்தனவே.
 
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 1989 ஆம் ஆண்டு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி குகனை ஆலோசகராக நியமித்தாரே? அது எந்த அடிப்படையில் என்று கருணாநிதி விளக்குவாரா? அப்போது பினாமி அடிப்படையில் ஆலோசகர் பதவி ஏற்படுத்தப்பட்டது என்று கருணாநிதி சொல்கிறாரா? என்பதை அவர் தான் விளக்க வேண்டும். தன்னால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் தெரிவித்த ஆலோசனையின் பேரில் குடும்ப அட்டைகள் பெறத் தகுதியுடையவர்களை நிர்ணயிக்க கணக்கெடுப்பு படிவம் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் ஏற்பட்ட பிரச்சனைகளை யெல்லாம் கருணாநிதி மறந்திருந்தால், அது பற்றி நினைவில் வைத்திருக்கும் அவரது கட்சியினரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.  
 
30.11.1997 அன்று ஏ.கே.வெங்கட் சுப்ரமணியன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஓய்வு பெற்றவுடன் 1.12.1997 முதல் முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அலுவலராக மறுபணி நியமனம் செய்யப்பட்டு 9 துறைகளின் பணிகளை மேற்பார்வை  மற்றும் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டார். துறைகளின் பணிகளை மேற்பார்வை மற்றும் ஆய்வு செய்வது தலைமைச் செயலாளரின் பணி தானே! அப்படியென்றால் சிறப்புப் பணி அலுவலர் என ஒரு பினாமி பதவியை கருணாநிதி ஏற்படுத்தினாரா?
 
தனது தனயனுக்காக கருணாநிதி உருவாக்கிய துணை முதல்வர் என்ற பதவி  இந்திய அரசமைப்புச் சட்டத்திலோ, அரசின் அலுவல் விதிகளிலோ இல்லையே? அப்படியென்றால் பினாமி முதல்வராக ஸ்டாலினை கருணாநிதி நியமித்தாரா? மூத்த அமைச்சர் அன்பழகன் கோப்புகளைப் பார்த்தபின் துணை முதல்வருக்கு கோப்புகள் சமர்ப்பிக்கப்படுவது பற்றி பிரச்சனை ஏற்பட்டு, சமாதான நடவடிக்கையாக நிதியமைச்சர் பார்க்க வேண்டிய கோப்புகளை துணை முதல்வர் பார்த்தபின் நிதியமைச்சருக்கு அனுப்பப் படலாம் என்ற வேடிக்கை உத்தரவை பிறப்பித்தவர் தான் கருணாநிதி.
 
மேலும் அடுத்த பக்கம்..

2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியமைத்த போது 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 96 தான். 234 உறுப்பினர்களில் பாதி எண்ணிக்கை 117 ஆகும். எனவே, தனியாக ஒரு கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்றால் அந்த கட்சிக்கு 118 உறுப்பினர்களாவது இருத்தல் வேண்டும். அப்போது தான் அதனை ஒரு மெஜாரிட்டி அரசு என்று கூற இயலும்.
 
118 என்ற எண்ணிக்கைக்கு, மற்ற கட்சிகளுடன் அவை கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவைகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டால் அதை கூட்டணி ஆட்சி என்று கூறலாம். ஆனால் வெறும்  96 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்ட திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்ல இயலும்? மைனாரிட்டி அரசு என்பதற்கான விளக்கம் பற்றி கருணாநிதிக்கும், திமுகவிற்கும் இன்று வரை புரியாததால்தான் மைனாரிட்டி திமுக அரசு என்று நாங்கள் குறிப்பிடுவதை பற்றி வருத்தப்படுகிறார்கள்; கோபப்படுகிறார்கள்.
 
மு.க.ஸ்டாலின் ஒரு விழாவில் பேசும் போது, வழக்கம் போல எதிர்கட்சிகளை வெளியே தூக்கிப் போடாமல், மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கிடைக்கும் என்று தான் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களது வாதங்களை கேட்டு, அவர்களது வினாக்களுக்கு தகுந்த பதில் அளிப்பது; எதிர்கட்சியினரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பின், அவற்றை ஏற்றுக் கொள்வது; என்ற மிக உயர்ந்த ஜனநாயக கோட்பாட்டில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் அம்மா.
 
சட்டப்பேரவைத் தலைவரின் ஆணைகளுக்கு கட்டுப்படாமல் மற்ற உறுப்பினர்களை பேச விடாமல், இடையூறு ஏற்படுத்தி கூச்சல் குழப்பம் விளைவிப்பதற்கும் தான் என்ற அடிப்படையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை சட்டப்பேரவைத் தலைவர் வெளியேற்றாமல், சட்டமன்றத்தை எவ்வாறு நடத்த இயலும்? சட்டமன்றத்தின் மாட்சிமையை மீட்டு எடுக்க வேண்டியது சட்டப்பேரவைத் தலைவரின் கடமை அல்லவா?
 
தற்போது நான் விரிவாக அளித்துள்ள விளக்கத்தை கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் நன்கு படித்து புரிந்து கொண்டால் அதிமுக அரசு, பெரும்பான்மை அரசு, அதாவது மெஜாரிட்டி அரசு என்பது புரிய வரும்.  அதற்கேற்ப விவாதங்களில் பங்கு பெற்றால், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அவ்வாறு இல்லாமல் மற்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், சட்டப்பேரவையின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், திமுகவினர் நடந்து கொண்டால் அதற்குரிய பலனைத்தான் அவர்கள் பெறுவர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil